Mai 9, 2024

இலங்கைத் தீவில் தனித்தமிழீழ நாட்டை அமையுங்கள் என்றே பௌத்த தேரர்கள் கூறுகின்றனர்: – மனோ

இலங்கைத் தீவில் தனித்தமிழீழ நாட்டை அமையுங்கள் என்றே பௌத்த தேரர்கள் கூறுகின்றனர்: – மனோ

தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள் என தமிழர்களுக்கும் அதற்கு உதவுங்கள் என சர்வதேச சமூகத்துக்கும் தேரர்கள் மறைமுகமாகக் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்த இன்று (திங்கட்கிழமை) முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “கறுப்பு ஜூலை புகழ் கொண்ட ஒரு தேரர் உட்பட பெளத்த தேரர்களின் குழு மூன்று பிரேரணைகளை தேசிய அரங்கில் முன் வைத்துள்ளது.

அதன்படி, நாட்டின் பெயரை ‘சிங்களே’ என மாற்றனும், அதிகார பரவலாக்கம் வேண்டவே வேண்டாம், சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி ஆகிய பிரேரணைகளை  முன்வைத்துள்ளன.

அதாவது இந்த தேரர்கள் மறைமுகமாக, ‘உங்களுக்கு இங்கு இடமில்லை. தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள்’ என தமிழர்களுக்கும் ‘அதற்கு உதவுங்கள்’ என சர்வதேச சமூகத்துக்கும் கூறுகிறார்கள் என நினைக்கிறேன்.

ஆகவே, இந்த தேரர்கள்தான் இன்று இலங்கையின் பிரதான பிரிவினைவாதிகள். மீண்டும், மீண்டும், இலங்கைக்கு கறுப்பு ‘பெயிண்ட்’ அடிக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபணர் குழுவிடம் கடந்த சனிக்கிழமை பௌத்த மத சிரேஷ்ட தலைவர்கள் தமது யோசனைகளை முன்வைத்தனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்கள், “உத்தேச புதிய அரசிலமைப்பில் நாட்டின் பெயர் தனி சிங்கள இனத்தை பிரநிதித்துவப்படுத்துவதாக காணப்பட வேண்டும்.

சிங்கள மொழி மாத்திரம் அரசகரும மொழியாக அறிவிக்கப்படுவதுடன், தமிழ், ஆங்கிலம் மொழிகள் இரண்டாம் மொழியாகக் காணப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது