சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்த மட்டக்களப்பு அரச அதிபர் கொழும்புக்கு மாற்றம்!

தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளில் சிங்களத் தொழிலாளர்கள் சிலர் அத்துமீறி அபகரித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்.

கிழக்கு ஆளுநர் திருமதி அனுராதா ஜகம்பத் கொழும்பு நிர்வாகத்துக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாகவே மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திடீரென கொழும்புக்கு இன்று புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் காணிகளில் சிங்கள மக்கள் குடியேறி அங்கு சோளச் செய்கையில் ஈடுபடுவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்.

அத்துடன் ஆளுநரின் மேற்பார்வையில் சட்ட விரோதமான சிங்களக் குடியேற்றங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றும் வருகின்றன. இந்தச் செயற்பாடுகளுக்கு எதிராக அரச அதிபர் கலாமதி பத்மராஜா நடவடிக்கை எடுத்திருந்தார்.

அத்தோடு இராஜாங்க அமைச்சர் ஒருவரின் நெருங்கிய ஆதரவாளருக்கு மண் அகழ்வதற்கான அனுமதியும் அரச அதிபர் கலாமதி பத்மராஜா வழங்க மறுத்திருந்தார்.

இந்தக் காரணங்களினாலேயே திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டதாக மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் சிலர் சமூகம் மீடியாவுக்கு தெரிவித்தனர்.

திருமதி. கலாமதி பத்மராஜா, கொழும்பில் உள்ள பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் கே. கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் காணிகளில் தங்கள் மாடுகளை மேச்சலுக்கு விடுவதாகவும் அந்தக் காணிகள் தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்கள் எனவும் இடமாற்றம் செய்யப்பட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களும் அவை தங்களின் பாரம்பரியக் காணிகள் என்று அரச அதிபரிடம் முறையிட்டும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.