யாழ் மாநகரிற்குள் பண்டிகைகால அங்காடி வியாபாரம் முற்றாகாத் தடை. மீறினால் சட்ட நடவடிக்கை – முதல்வர் ஆனல்ட் அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வருடாவருடம் வழமையாக யாழ்ப்பாணம் மாநகரசபையினால் அனுமதிக்கப்படும் ‚பண்டிகைகால அங்காடி‘ வியாபாரத்திற்கு இம்முறை முற்றாக தடை விதிக்கப்படுகின்றது என்பதை அறியத்தருகின்றேன்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் பரவல் மற்றும் தாக்கங்களிலிருந்து பொது மக்களை பாதுகாப்பது எமது கடமையாகும். அந்த வகையில் கொவிட் 19 தாக்கத்திலிருந்து யாழ் மாநகரத்தையும், பொது மக்களையும் பாதுகாக்கும் வகையில் எம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னாயத்த நடவடிக்கைகளின் தொடராக சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை கருத்திற்கொண்டு இம்முறை பண்டிகைகால அங்காடி வியாபாரம் முற்றாகத் தடைசெய்யப்படுகின்றது.

எமது தடையை மீறி யாரேனும் நடைபாதைகளில், வீதியோரங்களில், யாழ் நகர்ப்பகுதிகளில் மற்றும் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ‚நடைபாதை வியாபார நடவடிக்கைகளில்‘; ஈடுபடுவது குறித்து எமது மாநகர வருமானவரிப் பரிசோதகர்களால் அடையாளப்படுத்தப்படுமிடத்து குறித்த விற்பனைப் பொருட்கள் மாநகரசபையினால் கையகப்படுத்தப்படுவதுடன் அவை மீள ஒப்படைக்கப்படமாட்டாது. மேலும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட உரிய நபர்கள் மீதும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றேன்.

எனவே எமது மாநகர குடியிருப்பாளர்கள், பண்டிகைகால நடைபாதை வியாபாரிகள், வெளிமாவட்ட பண்டிகைகால அங்காடி வியாபாரிகள் என அனைவரும் இவ்விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

இம்மானுவல் ஆனல்ட்,

முதல்வர்,

மாநகரசபை,

யாழ்ப்பாணம்.