April 28, 2024

போர்க்களத்தில் இறுதிவரை விடுதலைப் புலிகளின் தலைவர் போராடிக் கொண்டே இருந்தார்! சரத் பொன்சேகா….

இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடையவில்லை, அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை, இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரைப் போராடியே உயிரிழந்தார் என முன்னாள் இராணுவத்தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னரே உயிரிழந்தார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்து தொடர்பில் இறுதிப் போரில் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கேட்டபோதே அவர் இந்த விடயத்தை கூறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,

பிரபாகரனின் சாவை வைத்து அன்று தொடக்கம் இன்று வரை சிலர் அரசியல் செய்து வருகின்றனர். இராணுவத்தினருடனான நேரடி மோதலிலேயே பிரபாகரன் உயிரிழந்தார் என்பது உண்மை.

அவரின் வெற்றுடலையே இராணுவத்தினர் மீட்டனர். பிரபாகரன் ஒரு பயங்கரவாதக் குழுவின் தலைவர். எனினும், அவர் சிறந்த போர் வீரன்.

அதனால் அவர் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு. பிரபாகரனை உயிருடன் பிடிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் விரும்பின.

அந்த நாடுகள் இலங்கை அரசுக்கு அன்று அழுத்தமும் கொடுத்திருந்தன. எனினும், பிரபாகரன் எந்தத் தரப்பிடமும் சிக்காமல் இறுதி வரைப் போராடியே சாவடைந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert