Mai 9, 2024

முல்லைத்தீவின் எல்லையிலுள்ள தமிழ் மக்களின் பகுதிகள் பறிபோகும் நிலையில்..!!

முல்லைத்தீவின் எல்லையிலுள்ள தமிழ் மக்களின் பகுதிகள் பறிபோகும் நிலையில்..!!

முல்லைத்தீவின் எல்லையிலுள்ள தமிழ் மக்களின் பகுதிகளை மகாவலிக்குள் உள்வாங்க சூழ்ச்சிகள் நடப்பதாக முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி – முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறத்தே, நாயாற்றிற்குத் தெற்கேயுள்ள, கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய்மேற்கு, கருநாட்டுக்கேணி , கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய ஆறு தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளை மகாவலி அபிவருத்தி அதிகாரசபை தமது எல்லைக்குள் உள்வாங்குவதற்கு முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத்திடம் கோரியிருந்தது.

இந் நிலையில் இவ்விடயத்தினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுடைய கவனத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து, அவர் இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு கோரி, பதின் மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய மனுவை, மகாவலி அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.

அத்தோடு பதின்மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாவலி அபிவிருத்தி அமைச்சரை சந்தித்து இவ்வாறான விடயங்களை நிறுத்துமாறும் வலியுறுத்தியதையடுத்து, குறித்த இணைப்பு விடயம் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மகாவலி எல் என்ற போர்வையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த பெருமளவான நிலப்பரப்புகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக அபகரித்துககொண்டிருக்கின்றனர் என்பதை ஏற்கனவே பலதடவைகள் நாம் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

அந்தவகையிலே எமது தமிழர் தாயகப் பூமியான மணலாற்றுப் பகுதிக்கு ,வெலிஓயா என்ற பெரைச்சூட்டி, மகாவலி என்ற போர்வையில் அக்காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணிப் பகுதிகளில் வாழ்கின்ற எமது தமிழ் மக்கள் தமது பூர்வீகக் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செல்லும்போது சில அரச திணைக்களங்கள் எமது மக்களை தடுக்கின்றனர்.

இவ்வாறான அரச திணைக்களில் குறிப்பாக வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை போன்ற திணைக்களங்களே அவ்வாறு தமிழ் மக்கள் தமது பூர்வீக விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடைவிதிக்கின்றன.

இதேவேளை சிங்கள மக்கள், தமிழ் மக்களின் காணிகளில் அத்து மீறி நுழைந்து அங்கு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கண்டுகொள்ளாத அரச திணைக்களங்கள், எங்களுடைய தமிழ் மக்கள் தமக்கு உரித்தான தமது பூர்வீக விவசாய நிலங்களில், விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, பலவிதத்திலும் தடைகளை விதிக்கின்றனர்.

இதனைவிட அண்மையில் நாயாற்றிற்குத் தெற்கேயுள்ள, கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி , கொக்குத்தொடுவாய் வடக்கு, கொககுத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய ஆறு தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற நோக்கோடு, தமது நிர்வாக அலகுடன் இணைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத்தினரிடம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கோரிக்கை விடுத்திருந்தது.

இதை நாம் அறிந்தவுடன், அவசரமாக இவ்விடயதினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தோம்.

உடனடியாக அவர் இவ்விடயத்தில் கரிசனையுடன் செயற்பட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதின் மூன்று பேருடைய ஒப்பத்தினைப் பெற்று மகாவலி அபிவிருத்தி அமைச்சராக தற்போது இருக்கும் சமல் ராஜபக்சவிடம் குறித்த இணைப்பு விடயத்தினை நிறுத்தும்படி கோரிக்கை மனு ஒன்று கையளிக்கப்பட்டதுடன், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதின்மூன்று பேரும் மகாவலி அபிவிருத்தி அமைச்சரைச் சந்தித்து இவ்வாறாக தமிழ் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வகையில் இடம்பெறும் இணைப்பு நடவடிக்கையை நிறுத்தும்படி வலியுறுத்தியதை அடுத்து இவ்விடயம் நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது பொருத்தமற்ற செயற்பாடாகும். தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.

மேலும் மத்திய அரசு இவ்வாறாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரிப்பதை நிறுத்துவதுடன், அரச திணைக்களங்கள் இவ்வாறு தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதைத் தடுத்து, அவற்றினை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்” என்றார்.