Mai 9, 2024

ஹெல்மெட் அணியாததால் ரூ.100 அபராதம் – ஆட்டோ ஓட்டுநர்கள் அலறல்!

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி போக்குவரத்து காவலர்கள் 100 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. திருச்சியில் சமீபகாலமாக போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு காவல்துறையினர் சார்பில் வண்டி என்னை மட்டும் குறித்துக்கொண்டு ஆன்லைனில் அவருடைய தொலைபேசி எண்ணிற்கு அபராதம் குறித்த விவரங்களை அனுப்பி வைக்கின்றனர்.

இதனால் பெரும்பாலான மக்கள் மற்றும் ஓட்டுநர்கள் தாங்கள் எந்த இடத்தில் தவறு செய்கிறோம் என்பதுகூட தெரியாமல் அவர்களுடைய தொலைபேசி எண்ணிற்கு அபராத கட்டணம் மட்டும் குறுஞ்செய்தியாக செல்வதாக புகார் எழுந்து வருகிறது. திருச்சி கிராப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் (32) என்பவர் கடந்த 6ஆம் தேதி திருச்சியிலிருந்து தில்லைநகர் வழியாக பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்றபோது அவரது செல்போனுக்கு திருச்சி மாநகர காவல்துறையின் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதனை திறந்துபார்த்த போது, ஹெல்மட் அணியாததற்காக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினார்.

வடிவேலு திரைப்பட பாணியில் ஆட்டோ ஓட்டுநருக்கு ஹெல்மட் அணியவில்லை என்று கூறி அபராதம் விதிக்கப்பட்ட சம்பவத்தால், ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று தலையில் ஹெல்மட் அணிந்தவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஆட்டோ ஓட்டுநர்கள், திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாரம் 2 ஆயிரம் ரூபாய் அபராதம், அவர்களுக்கு தெரியாமலேயே வண்டி எண்ணை குறித்து வைத்து அனுப்பி விடுவதாக தெரிவித்தனர். மேலும்,தங்களுடைய ஒரு நாளைய வருமானம் 150 ரூபாயில், இதில் 100 ரூபாய் அபராதம் கட்ட வேண்டி இருப்பதால் தங்களது குடும்பங்களை எப்படி காப்பாற்றுகூது என கேள்வி எழுப்பினர். மேலும், தற்போது ஆட்டோவில் ஹெல்மெட் அணிய வேண்டுமா? என்ற கோரிக்கையை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்..