Mai 9, 2024

தனக்கு கொரோனா இல்லை என்றும், அழகான பெண்களை முத்தமிடுவேன் என்றும் பிரசாரத்தின் போது டிரம்ப் தெரிவித்தார்!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பல நாட்களுக்கு பிறகு முதல் முறையாக பிரசாரத்தில் கலந்து கொண்ட டிரம்ப், தனக்கு கொரோனா இல்லை என்றும் அதனை நிரூபிக்க அழகான பெண்களை முத்தமிடுவேன் என்றும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி, டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் ஜனாதிபதி டிரம்புக்கும், அவரது மனைவி மெலனியாவுக்கும் கடந்த 1-ந்தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

டிரம்புக்கு காய்ச்சல் தீவிரமாக இருந்ததால் மறுநாளே அவர் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு 4 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பின்னர் கடந்த 5-ந்தேதி டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல் பிரசாரத்தை மீண்டும் தொடங்க டிரம்ப் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

ஆனால் டிரம்ப் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டார் என்பதை உறுதி செய்யாமல் அவர் பிரசாரத்தில் கலந்து கொள்வது ஆபத்தானது என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த சூழலில் டிரம்ப் உடலில் வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதாகவும் அவரிடமிருந்து பிறருக்கு வைரஸ் பரவும் அபாயம் இல்லை என்றும் வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் சீன் கான்லி கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 11 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் பங்கேற்றார். தனி விமானம் மூலம் புளோரிடா சென்றடைந்த டிரம்ப் சான்போர்டு நகரில் நடந்த பிரசார பேரணியில் கலந்து கொண்டார்.

இதையொட்டி சான்போர்டு நகரில் டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பேரணியில் கலந்து கொண்டனர். அதேபோல் டிரம்பும் முக கவசம் அணியாமலேயே பிரசாரத்தில் ஈடுபட்டார். அதே சமயம் அவர் தனது பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாக தனது ஆதரவாளர்களை நோக்கி முக கவசங்களை வீசி எறிந்தார். அதன் பின்னர் டிரம்ப் பேசியதாவது:-

இன்று முதல் 22 நாட்களில் தேர்தலை வெற்றி கொள்ளப்போகிறோம். வெள்ளை மாளிகையில் கூடுதலாக 4 ஆண்டுகள் பணிபுரிய இருக்கிறோம். நான் இப்போது கொரோனாவை கடந்து விட்டேன். நான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவன் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் வலிமை பெற்றவனாக உணர்கிறேன்.

கூட்டத்துக்குள் நடந்து வந்து உங்கள் அனைவரையும் முத்தமிடுவேன். ஆண்களையும், அழகான பெண்களையும் மற்றும் ஒவ்வொருவரையும் முத்தமிடுவேன். நான் ஒன்றும் வயது முதிர்ந்தவன் கிடையாது. நான் இளமையானவன். நான் நல்ல உடல் வடிவத்துடன் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே டிரம்பின் இத்தகைய அலட்சியப் போக்கை ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்தார். இதுபற்றி அவர் கூறுகையில் “டிரம்புக்கு கொரோனா என்று கண்டுபிடித்த பிறகும் அவரது நடத்தை அவரை மனசாட்சி உள்ளவராக காட்டவில்லை. அவர் எவ்வளவு காலம் ஜனாதிபதியாக தொடர்வாரோ அவ்வளவு காலம் அவரது அலட்சியமும் நீடிக்கும், கொரோனா மீதான அவரது சொந்த அக்கறையின்மையே நாட்டு மக்கள் மீதும் அவரிடத்தில் பிரதிபலிக்கிறது” என்றார்.