April 28, 2024

தமிழ் வரலாற்றறிஞர்களின் பொறுப்பு? மு.திருநாவுக்கரசு

வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தேசம் என்ற அடிப்படையில் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் அவர்களின் உள்ளார்ந்த உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வரலாறு பற்றிய தவறான கண்ணோட்டங்கள் களையப்பட்டால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் இந்த நாட்டில் உதயமாகும் என்றும் யாழ்- கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் என்றும் இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ் என்றும் அந்த தமிழ் மொழியில் தனது உரையை ஆரம்பிப்பதாகவும் கூறி பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றிப் பின் சிங்கள மொழியில் தனது உரையை நிறைவு செய்தார்.
மேற்படி அவர் தமிழ் மக்கள் பற்றியதும் இலங்கைதீவு பற்றியதுமான உண்மையான வரலாற்றைக் கூறியதும் சிங்கள பௌத்த இனவாதிகள் கூரியவாள் கொண்டு சீறியெழுந்து நிற்கின்றனர். உண்மை அவர்களுக்கு இப்படி நெருப்பாய் சுடுகிறது.
பாராளுமன்ற முதல் அமர்வில் விக்னேஸ்வரன் பின்வருமாறு கூறினார்.
“வணக்கம் மாண்புமிகு சபாநாயகர் அவர்களே!
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் முதற்கண் என் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும் இந்த நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியுமாகிய எனது தாய் மொழியில் ஆரம்பித்து பின்னர் எல்லா மக்களையும் இணைக்கும் மொழியிலும் எனது வாழ்த்தினை கூறுகின்றேன். „“
இவ்வாறு இலங்கையின் சுதேச குடிமக்கள் தமிழர்களே என்றும் தமிழ் மொழியின் தொன்மையையும் சிறப்பையும் பற்றி விக்னேஸ்வரன் கூறியவற்றைக் கண்டு சிங்களத் தரப்பில் பெரும் கொதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் மேற்படி வரலாற்று உண்மையின் பின்னணியிலிருந்து தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அவர் வலியுறுத்தி பின்வருமாறு பேசியதைக் கண்டு அவர்கள் „“இடியேறு கேட்ட நாகம் போல் „“ காட்சியளிக்கிறார்கள்.
„“குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையுடன் மரபு, பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் தேசம் என்று அங்கீகரிக்கப்படுவதன் பிரகாரம் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடைய வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த உரிமைகளை அங்கீகரிப்பதுடன் கடந்த காலம் பற்றிய தவறான வரலாற்று கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும்”
என்று கூறினார்.
பொய்யான வரலாற்றைப் புனைகதையாகக் கூறி அதன் அடிப்படையில் தமிழ் மக்களை ஒடுக்கிவரும் சிங்கள-பௌத்த ஆட்சியாளர்கள் மேற்படி உண்மையான வரலாறைக் கண்டு கொதிப்படையாமல் இருப்பர் என்று எதிர்பார்க்க முடியாது.
எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார என்பவரிடம் இருந்து முதலாவது எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து ஆளும் தரப்பிலிருந்தும் , சிங்களப் புத்திஜீவிகளிடம் இருந்தும், பௌத்த பிக்குக்களிடம் இருந்தும் , சிங்கள ஊடகங்களிடம் இருந்தும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.
ஆனால் தமிழ் அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் என்போரிடமிருந்து மௌனத்தை தவிர வேறு எதுவும் இதுவரை வரவில்லை.
இலங்கையின் உண்மையான வரலாற்றின்படி இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெருங்கற் பண்பாட்டுடன் தமிழ் மக்கள் அரசு அமைத்து வாழ்ந்தார்கள் என்பதற்கான தெளிவான வரலாற்று ஆதாரங்கள் போதிய அளவு இதுவரை கிடைத்துள்ளன. இதனைப் பல சிங்கள வரலாற்று ஆசிரியர்களும் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் இப்போது வரலாற்றாசிரியர்கள் பலரும் ஆழ்ந்த மௌனத்தையே சாதிக்கின்றனர்.
நேர்மையான, உண்மையான சிங்கள வரலாற்றாசிரியர்களும் , சிங்கள அறிஞர்களும் இது பற்றிய உண்மையான வரலாற்றையும் அதன்படி தமிழ் மக்களுக்கான நீதியான உரிமையையும் பற்றி கூற வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு. ஆனாலுங்கூட அவர்கள் தம் பதவி, அரசியல் நலன்களுக்காக மௌனம் சாதிக்கின்றனர் என்பதே வேதனைக்குரிய
உண்மையாகும்.
ஆனால் அதேவேளை தமிழ் அறிஞர்களும், தமிழ் வரலாற்று ஆசிரியர்களும் கூடவே இவ்வாறு மௌனமாக இருப்பது ஒரு பெரும் குற்றச் செயலாகும். உண்மையில் இவர்கள் சிங்கள அரசாங்கங்களை அனுசரித்து நடந்து தங்களின் சுயநலனை பாதுகாப்பதற்காக இப்படி மௌனமாக இருக்கின்றார்கள் என்பதே தெட்டத் தெளிவான விடயமாகும்.
இது இன்று நேற்றல்ல , காலங்காலமாய் பொதுவாக நடந்து வருகிறது. சிங்கள பௌத்த அரசவாதம் பொய்யான வரலாற்றைப் புனைந்து அதன் அடிப்படையிற்தான் தமிழினத்தை அழித்தொழிக்கும் தனது இனப்படுகொலை அரசியலை முன்னெடுத்துள்ளது. எனவே இந்த இடத்தில் நீதியின் பெயராலும் அறிவு சார்ந்த வரலாற்று உண்மையின் பெயராலும் தமக்குரிய பொறுப்பை தமிழ் வரலாற்று அறிஞர்களும் மற்றும் அறிஞர்களும் நிறைவேற்றியாக வேண்டும்.
குறிப்பாக ஊடகவியலாளர்கள் இத்தகைய வரலாற்று அறிஞர்களை அணுகி அவர்கள் வாயிலாக இது பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமையும் அவர்களுக்கு உண்டு.
இத்துடன் கூடவே இன்னொரு விடயத்தையும் நாம் இங்கு நோக்க வேண்டியது அவசியம். ஜனாதிபதி நியமிக்கும் „“விசேட செயலணிகளில்““
தமிழ் மற்றும் முஸ்லிம் அறிஞர்கள் இல்லை என்றும் எனவே தமிழ் முஸ்லிம் அறிஞர்களை நியமிக்க வேண்டியது அவசியம் என்றும் அதன் மூலம் மூலம் நீதியும் சரியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட முடியும் என்றும் கூறும் ஒரு கருத்து இப்பொழுது பெரிதாக எழுந்து இருப்பதை காணலாம்.
உண்மையில் இது ஒரு தவறான கருத்து. எத்தனை தமிழ் அல்லது முஸ்லிம் அறிஞர்களை நியமித்தாற்தான் என்ன , அரச அதிகாரம் சிங்கள ஆட்சியாளர்கள் கையில் இருக்கும் பொழுது இந்த அறிஞர்களும் சிங்கள ஆட்சியாளர்களின் சேவகர்களாகத்தான் செய்யப்படுவார்கள்.
பொலிஸ்மா அதிபராக தமிழரான ஒரு சுந்தரலிங்கம் இருந்தபோதும், அவ்வாறே ருத்ரா ராஜசிங்கம் பொலிஸ்மா அதிபராக இருந்தபோதும் தமிழருக்கு எதிரான போலீஸ் அட்டூழியங்கள், அநியாயங்கள் குறைந்ததில்லை. மேலும் சட்டமா அதிபராக தமிழரான சிவா பசுபதி இருந்தபோதும் அவரும் சிங்கள ஒடுக்குமுறையின் கருவியாக இருந்தாரே தவிர வேறொன்றுமில்லை.
இவ்வகையில் எத்தகைய விசாரணை குழுக்களில் தமிழ் , முஸ்லிம் அதிகாரிகளோ அன்றி ஆணையாளர்களோ யார் இருந்தாலும் அதில் பலன் கிடைக்காது என்பது மட்டுமல்ல அவ்வாறு அவர்கள் இருப்பதே ஒடுக்குமுறையை நியாயப்படுத்த இன்னும் ஒரு வழியாகவும் அது அமைந்துவிடும் என்பதே நடைமுறை உண்மை.
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் பேசிய வரலாற்று உண்மையை சிங்களத் தலைவர்கள் எதிர்ப்பதைக்கண்டு இப்போது தமிழ் வரலாற்று அறிஞர்களும் மற்றும் அறிஞர்களும் அவரின் பேச்சில் உள்ள உண்மையை நியாயப்படுத்தும் வகையில் பேசத் தவறியிருப்பது மேற்படி இத்தகைய தமிழ் அறிஞர்கள், மற்றும் தமிழ் அதிகாரிகள் பற்றிய உண்மையான நிலைப்பாடுகளை பட்டவர்த்தனமாக பறைசாற்ற வல்லதாயுள்ளது.