Juli 27, 2024

நினைவு கூருவதை சிறிலங்கா கூலிப்படையால் தடுக்கமுடியாது

மாவீரர்களை நினைவு கூருவதை சிறிலங்கா கூலிப்படையால் தடுக்கமுடியாது! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு பகிரங்க அறிவிப்பு
தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப்பதற்காகத் தமது சொந்த வாழ்வை ஈகம் செய்த சுதந்திர வீரர்களை நினைவு கொள்வதை தடுக்க முடியுமா ?
எங்கள் பிள்ளைகளை நாங்கள் நினைவிற்கொள்வதை எவரும் தடுக்கமுடியாது-என  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி  தெரிவித்துள்ளார் .
இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
எங்கள் வாழ்விற்காக வீர காவியமான எங்கள் பிள்ளைகளை நவம்பர் 27 இல் நினைவிற்கொள்வதை இன அழிப்பு மூலம் லட்சக்கணக்கான தமிழ் உயிர்களை காவுகொண்ட கோட்டா அரசாலும்,அதன் கூலிப்படையாலும்  தடுத்துவிட முடியாது.
சிங்கள இனவாத அரசு மேற்கொண்ட போரில் போராடி மடிந்த மாவீரர்களை நினைவிற்கொள்ளவிடாமல் தடுக்கும் நடவடிக்கையினை நீதிமன்றம் ஊடாக மேற்கொண்டுவருகின்றது.
2009க்கு முற்பட்ட ஆண்டுகளில் , நவம்பர் 27 செய்தியை உலகமே எதிர்பார்த்திருந்தது.  ஏன் தென்னிலங்கையும் ஏதோவொரு செய்திக்காக, காத்திருந்தது. அச்செய்தியை அடிப்படையாக வைத்தே, அடுத்தகட்ட நகர்வுகளுக்கான காய்கள் நகர்த்தப்பட்டன. அதுதான் கடந்தகால உண்மை வரலாறு.
போரில் உயிர் இழந்தவர்களை நினைவு கொள்வதை  தடுக்க எந்த நாட்டிலும் உரிமை இல்லாத நிலையில் தமிழர்களை அடக்கி ஒடுக்க முனையும் சிங்கள பேரினவாத அரசிற்கும் அதன் ஏவல் படைகளுக்கும் தமிழர்களாகிய நாங்கள் ஒன்றினை சொல்லிவைக்க விருப்புகின்றோம்.
எங்கள் பிள்ளைகளை நாங்கள் நினைவிற்கொள்ளாமல் வேறு யார்நினைவிற்கொள்வது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தினை மீறும் இலங்கை அரசின் தமிழர்கள் மீதான அடக்குமுறையினை உலகறிய செய்வோம்.
சிங்கள இனத்தவர்களுக்கு ஒரு சட்டம் தமிழர்களுக்கு இன்னொரு சட்டம் என்ற நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள   கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
மே 19ஆம் திகதி உயிரிழந்த படையிருக்கான தேசிய நினைவுகூருதல் பெருமெடுப்பில் கொண்டாடப்படுகின்றது . இலங்கையில் மரணித்த இந்திய இராணுவத்தினரும் நினைவு கூருப்படுகின்றனர் ஆகவே . கார்த்திகை வீரர்களும் நினைவு கூரப்பட வேண்டியவர்களே
எங்கள் பிள்ளைகளை நாங்கள் ஆண்டிற்கு ஒருதடவை நினைவிற்கொள்ளும் நவம்பர் 27 இல் எந்த தடையினையும் எவரும் விதிக்கமுடியாது.
 என்பதை எங்கள் உறவுகள் நினைவாக நாங்கள் ஏற்றும் ஒவ்வொரு தீப சுடர்களும் சொல்லி நிற்கும் .
எனவே   நினைவேந்தலை  அரசியலாக்கி, அதனூடாக குளிர்காய்வதற்கு இடமளிக்காது வடக்கு கிழக்கில் வாழ்கின்ற அனைத்து தமிழ் உறவுகள் அனைவரும் எங்கள் தேசத்துக்காக உயிர்   கொடுத்த உங்கள் பிள்ளைகளை,சகோதர சகோதரிகளை,நவம்பர்  27 இல் நினைவு கூருவது ஒவ்வொரு தமிழர்களின் தார்மீக கடயையாகும்.
நாட்டில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றினை கருத்தில் கொண்டு பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றி துயிலும் இல்லங்களில் மீளாத்துயிலில் இருக்கும் தத்தமது உறவுகளுக்கு, விளக்கேற்றி  வணக்கம் செலுத்த முன்வரவேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின்  சார்பாக வேண்டி நிற்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்