முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஸ்டாலின் தயாரா?” அதிமுக அமைச்சர் கேள்வி!

அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது தவறு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

திமுக தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக அரசு திட்டமிட்டு தடுத்து வருவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக உதயநிதி பரப்புரை மேற்கொள்ளும் போது அவரை கைது செய்து, இரவு 11 மணிவரை போலீசார் காக்க வைத்து விடுவிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதேபோல் கொரோனா ஆய்வு என்ற போர்வையில் மாவட்டந்தோறும் முதல்வர் அரசு விழாவில் அரசியல் கூட்டமாக நடத்துகிறார். அரசு விழாக்கள் அரசியல் விழாக்களாக மாற்றியுள்ளார் என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது தவறு இல்லை. என் மகனை அரசியலுக்கு கொண்டு வந்தது நான் இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் என் மகனை அரசியல் களத்திற்கு அழைத்து வந்தார். திமுகவில் வழிவழியாக வாரிசு அரசியல் நடக்கிறது. அதிமுகவில் அப்படி இல்லை. அதிமுகவில் கொடி பிடித்தவர்கள் கூட முதல்வராக முடியும். திமுகவில் முடியுமா? திமுக மூத்த நிர்வாகியான துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஸ்டாலின் தயாரா? உதயநிதியை அறிவிப்பாரே தவிர துரைமுருகனை அறிவிக்க மாட்டார் ஸ்டாலின்” என்றார்.