September 9, 2024

கண்ணீரில் அரசியல் இலாப – நட்டக் கணக்குப் பார்க்காதீர்கள்:காக்கா

மாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009)  யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் (காக்கா) ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில விடயங்களை சக மாவீரர் குடும்பங்கள் மற்றும் உணர்வாளர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

உலகையே ஆட்டிப்படைக்கும் கெரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மேலதிகமாக இனவாத வைரஸையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் பல்வேறு சட்டங்களும் அதன் உண்மையான நோக்கிலிருந்து திசை திரும்பி தமிழருக்கு எதிராகப் பாய்வது போலவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் அதன் இலக்கிலிருந்து திசை திரும்புவதை அவதானிக்க முடிகின்றது. யுத்தம் முடிந்து பதினொரு ஆண்டுகளாகி விட்டன. யுத்தம் ஏற்படுத்திய தாக்கம் அப்படியே இருக்க எமது பிள்ளைகளை நினைவுகூருவது புலிகளின் மீளுருவாக்கம் என்று கற்பிதம் பண்ண முயல்வது விஷமத்தனமான செயல்.

எங்கள் பிள்ளைகள் விதைக்கப்பட்ட இடத்தில் நின்று கண்ணீராலும் வாய்மொழியாலும், மனதாலும் பிள்ளைகளிடம் உறவாட நினைக்கிறோம். அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு வரும்போது இந்த ஒரு வருடமாக மனதில் சுமந்த சுமைகளை கேள்விகளை அங்கே இறக்கி விட்டு வருவது போன்ற உணர்வும் திருப்தியும் எமக்கு ஏற்படும். நிலைமாறுகால நீதியும் உறவுகளை நினைவுகூருவதை ஏற்றுக்கொள்கின்றது. சங்கிலித் தொடராக நிகழ்ந்து வரும் உணர்வுபூர்வமான நிகழ்வைக் கைவிட எமது மனம் துணிய மாட்டாது.

இந்த நிலையிலும் உலக ஒழுங்கிலிருந்து நாம் மாறுபட்டு நடக்க முடியாது. ஒரு கட்டுப்பாடான வழிநடத்தலில் தம்மை ஆகுதியாக்கிய பிள்ளைகளின் பெயரால் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தவறான முன்னுதாரணமாகி விடக்கூடாது. எல்லாத் துயிலும் இல்லங்களிலும் தனிநபர் இடைவெளியைப் பேணக்கூடியவாறான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நம்புகிறேன். அவ்வாறான அறிவுறுத்தல்கள் சரியான முறையில் செய்யப்பட்டிருக்காவிடினும் முன்னுதாரணமான மக்கள் கூட்டமாக நாம் நடந்து கொள்வோம்.

அஞ்சலி செலுத்தும்போது மாவீரரின் பெற்றோர் பிள்ளைகள் உறவுகளில் யாரோ ஒருவர் மட்டும்  விதைக்கப்பட்ட இடங்களில் நின்று அஞ்சலிக்கட்டும். ஏனையோர் நிகழ்விடத்துக்கு வெளியே தனிநபர் இடைவெளியையும் சுகாதார நடைமுறைகளையும் பேணியபடி தங்கள் சொந்தங்களுக்காக அஞ்சலிக்கட்டும்.  அங்கு நிற்கும்போது புதிய முகக் கவசத்தை அணிந்திருப்போம். எதற்கும் முன்னெச்சரிக்கையா இன்னொன்றை எமது உடைமையில் வைத்திருப்போம்.

கிருமி நீக்கும் திரவங்கள் மூலம் எமது கைகளைச் சுத்தப்படுத்துவதற்கு அடுத்தவரை நம்பியிராமல் வழமைபோல், பூக்கள், எண்ணெய், திரி ,சுட்டி, கற்பூரம் முதலானவற்றைக் கொண்டு செல்வதுபோல் அதனையும் கொண்டு செல்வோம். நினைவேந்தல் முடிந்த பின்னரும் தனிநபர் இடைவெளியைப் பேணிக் கொள்வோம். எமது நடத்தை முன்னுதாரணமாக அமையட்டும்.

ஆயுதம் ஏந்தி மடிந்த தமது பிள்ளைகளை நினைவுகூரத் தமக்குள்ள உரிமை எமக்கும் உள்ளது என்பதை இரு புரட்சியின்போதும் உயிரிநீத்த ஜே.வி.பி. உறுப்பினர்களின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வர். அவர்கள் முழுநாட்டையுமே கைப்பற்ற நினைத்தவர்கள் எமது பிள்ளைகள் அவ்வாறில்லை. அப்படியிருந்தும் கண்ணீரில் வேறுபாடு காட்டச் சொல்லும் சட்டங்கள் பொருத்தப்பாடானவையல்ல. அந்தப் பெற்றோரின் வேதனைகள் உணர்வுகள் எம்மால் மதிக்கப்பட வேண்டியவை. அதுபோல எமது உணர்வுகளை தாங்கள் வாக்களித்த தெரிவு செய்த தரப்புகளுக்கு உணர்த்த ஜே.வி.பி. உறுப்பினர்களின் பெற்றோர் முயல்வர் என்று நம்புகிறோம்.

பல்லினங்கள் வாழும் நாட்டில் எந்தவொரு   இனத்தவரின் கௌரவமும் பாதிக்காத வகையில் ஆட்சி நடத்திய சிங்கப்பூரின் பிரதமர் லீ குவான் யூவின் வரலாற்றை தென்பகுதி மக்களுக்கு அங்குள்ள அறிஞர்கள் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். களத்தில் தன்னெதிரே போரிட்டு மடிந்த எல்லாள மன்னனின் நினைவிடத்தில் சகலரும் மரியாதை செலுத்த வேண்டும் என அறிவித்த துட்டகைமுனு மன்னனின் நோக்கத்தையும் வரலாற்றையும் சரியான முறையில் மக்களிடம் விளக்கத் தவறியதால்தான் இன்றைய பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை எப்போது புரியப் போகிறார்கள்.

திரு. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம்” என்ற பெயரில் ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். இந்த ஆணைக்குழு அனைவரினதும் அபிப்பிராயத்தைக் கோரியது. “எனது மகள் விதைக்கப்பட்ட இடத்தில் நின்று அழும் உரிமை எனக்கு வேண்டும்”, என நான் எழுத்துமூலம் தெரிவித்திருந்தேன். ஒவ்வொரு மாவீரரின் பெற்றோரின் எதிர்பார்ப்பும் அதுதான். இன்றைய ஜனாதிபதிக்கும் இதே விடயத்தையே சுட்டிக்காட்ட  விரும்புகிறேன். நல்லது நடக்குமென எதிர்பார்ப்போம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

புலம்பெயர் உறவுகள் அந்தந்த நாட்டுச் சட்டங்களை மதித்தபடி நினைவேந்தலை மேற்கொள்ளுங்கள். எம்மைப் புரிந்து கொள்ளுமாறு சகல அரசியல் கட்சிகள், குழுக்களையும் பணிவாக வேண்டுகிறோம். எமது கண்ணீரில் தயவு செய்து அரசியல் இலாப – நட்டக் கணக்குப் பார்க்காதீர்கள்.