அரசுப்பள்ளி மாணவிக்கு, அதிமுக எம்எல்ஏ நேரில் வாழ்த்து!

சென்னை குன்றத்தூரில் அரசுப்பள்ளி மாணவி, மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டதற்கு, அதிமுக எம்எல்ஏ பழனி நேரில் வாழ்த்து தெரிவித்தார். கடந்த 2018ஆம் ஆண்டு குன்றத்தூர் அரசு பெண்கள் மேல்நிலையில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் மாணவி பிரியதர்ஷினி. இவர் ஆயிரத்து 97 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், மருத்துவம் படிப்பதற்காக 3 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். கடந்தமுறை நீட் தேர்வில் பிரியதர்ஷினி 489 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இந்நிலையில், தமிழக அரசு மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது. இதன் கீழ் பிரியதர்ஷினிக்கு, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது.

இதனால் மாணவி பிரியதர்ஷினியின் குடும்பத்தினர் மற்றும் அவரது பள்ளி ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவ படிப்பிற்கு தேர்வாகிய மாணவி பிரியதர்ஷினிக்கு, ஶ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனி நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார். மேலும், அவருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.