தடைககு எதிராக சட்ட ரீதியான அனுமதி ?

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

போரில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் தமது சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக இந்த நீதிப்பேராணை மனுவை வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யவுள்ளனர்.

இதற்கான அறிவித்தல் எதிர் மனுதார்களுக்கு மனுதாரர்களின் சட்டத்தரணியினால் பதிவுத் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று அறியமுடிகிறது.

எதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோரை குறிப்பிடப்படவுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூடாது என்று எதிர்மனுதார்களான வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கும் அவர்களின் பணியாற்றுபவர்களுக்கும் தலையீட்டு எழுத்தாணைக் கட்டளை வழங்குமாறு மனுதாரர்கள் கோரவுள்ளனர்.

மனுதாரர்களில் ஒருவரான வல்வெட்டித்துறை கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி, தனது மகன் பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரன் 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்தார் என்றும் அவரை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்றும் கோரவுள்ளார்..