அண்ணையைப் பார்க்கோணும் . . . – கார்த்தீகன்

சமாதானம் போர்த்திய காலம் அது. தமிழினத்தைப் பலியெடுப்பதற்குச் சிங்களம் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தது. காலங்காலமாகவே ஈழத்தமிழர்களின் கண்ணீராலும் செந்நீராலும் தன்னை நிரப்பிக்கொண்டிருந்த இந்துமாகடல், எங்கே இந்த ஒப்பந்தகாலத்தால் தான் வற்றிப்போய்விடுவேனோ என்ற அடிவஞ்சக ஆதங்கத்தில் டிசம்பர் 26 அன்று சுனாமியாகிப்பேரலையாகிப் பெரும்பலி எடுத்தது. 27 000 இற்கு மேற்பட்ட எம்முறவுகள் உட்பட திசையெங்கும் பறிக்கப்பட்ட உயிர்களால் பதறிப்போய் கிடந்தது உலகம். பெரியபெரிய நாடுகளின் முழுஉதவிகளைப் பெற்றுக்கொண்டும் மீட்புப்பணிகளை நெறிப்படுத்த முடியாமல் திணறின தேசங்கள். செய்வதறியாது முதல்நாள் வெறுமனே சோகஇசையை ஒலிபரப்பிய புலிகளின் குரல் வானொலிப்பொறுப்பாளரை அண்ணை அழைத்துப்பேசுகின்றார். ஓலத்துடன் ஒப்பாரியெழுப்பி நாம் ஒருபோதும் அழிந்துவிடலாகாது. „எங்கள் தேசத்திலே இடிவிழுந்தது ஏனம்மா! அது மறுபடியும் எழும்பி நிற்கும் பாரம்மா !“, நம்பிக்கை துளிர்க்க அடுத்தடுத்த நாட்கள் உறவுப்பால இணைப்புகளுடன் நொந்த இதயங்களை நிமிர்த்தின.இறைவனை மறந்ததால் ஏற்பட்ட தெய்வகுற்றம் என கொழும்பு வானொலி தன் கொள்கைபரப்பிக்கிடக்க, மீட்பார்கள் வரும்வரை மரணித்த உறவுகளை நாறும் பிணங்களாக அருவருப்போடு எண்ணிக்கணக்கிலிட்ட ஏனைய நாடுகளுக்கு மத்தியில், சின்னஞ்சிறிய தமிழீழமும் அது விழுதெறிந்த புலம்பெயர் சமூகமும் உடனேயே கண்களைத் துடைத்துக்கொண்டு காரியங்களில் இறங்கியிருந்தன. அடுத்தவர்களுக்காகக் காத்திராமல் சின்ன வன்னிமண், நீர்புகுந்த எறும்புப்புற்றைப்போலச் செயற்பட்டுக்கொண்டிருந்தது. தாயைப்போன்ற தலைவனின் வழிநடத்தலில் போராளிகள் யாவரும் பாதிக்கப்பட்ட கடற்கரையோரப்பிரதேசங்களில் தேவைப்பட்ட அவசரகட்ட நடவடிக்கைகளுக்காக நகர்த்தப்பட்டிருந்தனர். சகல மட்ட தளபதிகளும் ஆங்காங்கு நின்று நெறிப்படுத்திக்கொண்டிருந்தனர்.   மருத்துவப்பிரிவுப்போராளிகளின் சகல வளங்களும் தொற்றுநோய்த்தடுப்பிற்காகத் துரிதமாகப் பிரயோகிக்கப்பட்டன.

வலிகளை வாழ்க்கையில் அடிக்கடி உணர நிர்ப்பந்திக்கப்பட்ட ஈழத்தமிழர் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக அடுத்தகட்ட வாழ்க்கைக்குத் தம்மைத் தயாராக்கினர். சுனாமி அடித்த சில மாதங்களுக்குள்ளேயே தமிழர்கள் அனைவரும் நீச்சல் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கவேண்டும். அப்படியிருந்திருந்தால் உயிரிழப்புகளை ஓரளவு குறைத்திருக்கலாம் என்ற தாயான தலைவனின் விருப்பம் வள்ளிபுனத்தில் செயல்வடிவம் பெற்றது. மேலைத்தேசங்களில் இருப்பதுபோன்ற வசதிகளுடன்கூடிய நீச்சற்தடாகம் முதற்கட்டமாக சகல போராளிகளுக்கும் சிறுவர் இல்லங்களில் உள்ளவர்களுக்குமாகத் திறந்துவைக்கப்பட்டது. பெற்றோரை இழந்த மற்றும் ஆழிப்பேரலையை நேரடியாகக் கண்ட சிறார்களின் உளநலமேம்பாடு கருதி, முழுநீளக்கார்ட்டூன் படங்கள் குறுகிய காலப்பகுதியிலேயே தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டு பிள்ளைகளுக்குப் பயன்படக்கூடிய சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. „எங்களுடைய பிள்ளைகளின் வளர்ச்சி மிகவும் குன்றிவருகின்றது. இதை இப்படியே விட்டால் எதிர்காலத்தில் ஒரு நலிவான இனமாக நாங்கள் ஆகிவிடுவோம். எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் போசாக்கான உணவுவகைகளை இங்கே அறிமுகப்படுத்தவேண்டும். பாலினை உற்பத்தியாளரிடமிருந்து பயனாளர்வரை கொண்டுசெல்வதற்கான நவீனவசதிகள் இல்லாததைக் காரணம் காட்டிக்கொண்டிராமல் சீஸ்-தயாரிப்புக்கான மாற்றுவழிகளைத் தேடியறிய வேண்டும்“, புலம்பெயர்நாடு ஒன்றிலிருந்து வந்தவர்களுக்கு அவர் நிலைமையை எடுத்துவிளக்கிக் கொண்டிருந்தார். அவரின் ஆதங்கம் மனதில் பாரமாக உட்கார்ந்தது. இணையத்தில் தேடிப்பார்த்து உறவினர்களினூடாக அணுகியதில் வெளிநாட்டு நிறுனத்திடமிருந்து உள்ளீடு ஒன்று கிடைத்தது. எங்களுடைய வற்றல் இடுதல் போல மேலைத்தேசங்களில் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரிய முறைகளில் சில எங்களுக்கு ஏற்றவையாகத் தென்பட்டன. சொந்தமாகப் பரிசோதனை செய்துபார்க்க வசதியில்லாத காரணத்தினால், தாயான அந்தத் தலைவனுக்கு அனுப்பிவைத்ததோடு மனப்பாரம் இறங்கினாலும் என்னவானது மனம் அவாவியது. சில வாரங்களில் „அனுப்பின சாமான் கிடைச்சது. அது எங்கட பன்னீர்மாதிரித்தான் கிட்டத்தட்ட. தொடர்ந்து தேடுங்கோ !“, அண்ணை விரும்பியதைக் கொடுக்கமுடியாமல் போன வருத்தத்தை, முதுகில் பரிசாகக்கிடைத்த ஒரு தட்டு ஸ்பரிசம் பலமுறை போக்கியிருந்தது.

கிளிநொச்சி பாண்டியன்-சுவையூற்றுக்கு முன்னால் அமைந்திருந்த லெப்.கேணல் சந்திரன் பூங்காவை சிறார்கள், குடும்பங்களுக்கான பல்லின மிருகங்களுடன்கூடிய மனமகிழ்வுப்பூங்காவாக மேம்படுத்துவதிலும், தொடர்ந்து மிருகங்களின் வதிவிடங்களில் இருந்து எழுந்த தவிர்க்கமுடியாத துர்நாற்றத்தினால் அவதியுற்ற கிளி. மத்திய கல்லூரியின் விருப்பத்தை மதித்து உடனே அம்மிருகப்பகுதியை இடம்மாற்றியதிலும் தன்னுடைய எல்லாப் பிள்ளைகளினதும் விருப்பங்களை, கனவுகளை, எதிர்காலத்தைச் சிந்தையில் நிறைத்து வாழும் தாயான எங்கள் தலைவனை அவரின் அதிகம் பேசாத ஆற்றல்மிகுந்த செயற்பாடுகளினூடாக உணர்ந்துகொள்ளமுடியும். பத்து மாதம் ஒரு பிள்ளையைச் சுமந்து ஈன்றெடுப்பவள் அன்னை ஆகின்றாள். ஒட்டுமொத்த தமிழினத்தையும் தனது இதயங்களில் சுமந்து அவர்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்காகத் தன் முழுவாழ்நாளையும் அர்ப்பணித்துநிற்கும் எம் தலைவன் எத்தனை ஆயிரமாயிரம் தாய்மாருக்கு இணையானவர் !

ஓரு மனிதனுடைய வெற்றிக்கு அவனுடைய உறுதி ஆணிவேரானது. உறுதி என்னும்போது உடல் உறுதி மற்றும் உள உறுதி இரண்டுமே முக்கியமானவை. ஒன்று மற்றையதிற்கு ஆதரவாக அமைந்து ஒவ்வொருவரினதும் வெற்றிக்கு உதவும். இங்கு வெற்றி என்னும்போது தனியே போராட்டவெற்றி மட்டும் என்று அவர் என்றுமே எண்ணியிருக்கவில்லை. ஒவ்வொரு தமிழனினதும்  தனிப்பட்ட வாழ்விலான வெற்றியானது இனத்தின் ஒட்டுமொத்த கூட்டுவெற்றிக்கும், ஒட்டுமொத்த வெற்றியானது தனிப்பட்ட வெற்றிக்கும் வலுச்சேர்க்கும் என்ற யதார்த்த உண்மையை அவர் அதிகம் நம்பியிருந்தார். வீரம் விளைந்து நின்ற வன்னிமண்ணிலே ஓங்கியிருந்த உள்ள உறுதிக்கு வலுச்சேர்க்கும் வகையில் உடல் உறுதியும் வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்பதற்காக ஐந்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட சகல சிறார்களுக்கும் கராத்தே கற்றுக்கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. போராளிகளில் கராத்தே கற்றுத் தேர்ந்தவர்கள் தினந்தோறும் ஊர்ஊராகச் சிறார்களுக்கு கற்பித்தலில் ஈடுபட்டிருந்தனர். போர் ஆரம்பிக்கும்வரை இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

„எல்லோரும் தங்களுக்குள்ள அறிவியல் ஆற்றலை இனங்கண்டு வளர்த்தெடுக்கக்கூடிய மாதிரியான வசதிகளை நாங்கள் அமைச்சுக்கொடுக்கோணும்“, தலைவனின் அடுத்த கனவும் தன்னுடைய பிள்ளைகளைப் பற்றியதுதான். நம் நாட்டிலே உள்ள வழமையான பாடசாலைக்கல்வியானது ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்துள்ள ஆற்றலை இனங்கண்டுகொள்ளவோ, வளர்த்தெடுக்கவோ உதவுவதில்லை. அல்லது இருக்கும் வசதிகள் எல்லோராலும் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய விலையில் கிடைப்பதில்லை. ஆகவே, பாடசாலை முடிவடைந்த மாலைவேளைகளிலும் விடுமுறைநாட்களிலும் மாணவப்பராயத்தினர் பொழுதுபோக்காகவோ அல்லது ஈடுபாட்டின்காரணமாகவோ இணைந்துகொள்ளக்கூடிய மையம் ஒன்று. தமிழிற்காக அன்றைய மன்னர்கள் கழகங்கள் அமைத்தனர். எங்கள் தாயான தலைவன் அமைத்தது அறிவியற் கழகம். விசுமடுவிலே மிக விரைவாக பிரமாண்டமாக எழுந்து நின்றது. இலத்திரனியல் கணினியம், இயந்திரவியல், பௌதீகவியல், ஆங்கிலம் என வெவ்வேறு துறைகளுக்கென ஆய்வுகூடம், நூலகம்,  வகுப்பறை, துறைசார் அறிஞர்களின் வழிநடத்தல்களுடன் இமய ஆற்றல் எங்கள் இளசுகளிடையே  விருட்சங்களாக விதைக்கப்பட்டிருந்தன.

அண்ணையைப் பார்க்கோணும் ! அன்றைப்போலவே இன்றும் எல்லோருடைய மனமும் அவாவிக்கொண்டிருக்கின்றன. ஒரு தாயிடம் அன்பாக அடம்பிடித்து மடியில் இடம்பிடிப்பதைவிட, அத்தாய் விரும்பும் பிள்ளையாக ஒவ்வொரு தமிழனும் காலத்தின் தேவை அறிந்து,  அவருடைய உள்ளத்தின் இருப்பை உணர்ந்து அதன்படி நடந்தால், நாம் விரும்பியபடி தாயான எங்கள் தலைவனின் உள்ளத்தை நெருங்கலாம் !