வெளிநாட்டவர்களுக்கு இனி அமீரகத்தில்10 ஆண்டுகால விசா!

அமீரக நாட்டின் முன்னேற்றத்தின் பொருட்டு, பிஎச்.டி., பட்டதாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் சில குறிப்பிட்ட பல்கலைகளின் பட்டதாரிகள் ஆகியோருக்கு, 10 ஆண்டுகால கோல்டன் விசாவை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது அமீரக அரசாங்கம்.இதன்மூலம், மேற்கண்ட அறிவுசார் நபர்கள், அமீரகத்திலேயே அதிகாலம் தங்கியிருந்து, தங்களின் திறனை நாட்டு முன்னேறத்திற்காக பயன்படுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நீண்டகால தங்கும் திட்டம், முதன்முதலில் கடந்த 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துபாயின் ஆட்சியாளர் என்ற பல்வேறு பொறுப்புகளிலுள்ள ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்டெளம் தொடர் டிவீட்டுகளில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

“சகோதர, சகோதரிகளே, இந்நாட்டில் வாழும் குறிப்பிட்ட வகை நபர்களுக்கு, 10 ஆண்டுகால கோல்டன் விசா வழங்குவதை அங்கீகரித்து இன்று உத்தரவு வழங்கியுள்ளோம். அனைத்து பிஎச்.டி., பட்டதாரிகள், அனைத்து மருத்துவர்கள், கணிப்பொறி துறை, எலக்ட்ரானிக்ஸ், புரோகிராமிங், எலக்ட்ரிசிட்டி மற்றும் பயோடெக்னாலஜி துறை சார்ந்த பொறியாளர்கள், அமீரக அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் படித்து சராசரி மதிப்பெண் பெற்றவர்கள் இந்த வகைப்பாட்டினுள் அடங்குவார்கள்” என்று அவர் டிவீட் செய்துள்ளார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு துறை, பிக் டேட்டா, தொற்றுநோய், வைராலஜி ஆகிய துறைகளில் சிறப்பு பட்டப்படிப்பு முடித்தவர்களும் இந்த வகைப்பாட்டினுள் அடக்கம் என்று கூறப்பட்டுள்ளது.