மூக்குத்தி அம்மனை பார்த்து ரசித்த சீமான்!

அரசியலை மையமாகக்கொண்டு ‘எல்.கே.ஜி.’ படத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி, அடுத்து என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியிருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. மூக்குத்தி அம்மனான நயன் தாரா நடித்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. கார்ப்பரேட் சாமியார்களின் அடாவடித்தனங்களை தோலுரித்துக்காட்டும் இப்படம், அரசியலையும் போட்டு வெளித்திருக்கிறது.இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’மதத்தின் பெயரால் சமகாலத்தில் நிகழும் கொடுமைகளையும், மதத்தைக் கொண்டு மக்களைப் பிரித்து வாக்குவேட்டையாட முற்படும் அரசியல் நாடகங்களையும் தோலுரிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் கண்டு வெகுவாக ரசித்தேன்’’என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ’’மக்களை விழிப்பூட்டி எழச்செய்யும் வகையில் சமூகக்கருத்துக்களை நகைச்சுவையோடு தந்திருக்கிற இயக்குநர்கள் தம்பி ஆர்.ஜே.பாலாஜி, தம்பி என்.ஜே. சரவணன் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.