September 10, 2024

ஜெர்மனியில் கொரோனா நிலைமை இன்னும் தீவிரமாகவே உள்ளது என்று அதிபர் அங்கலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார்.

 

நோய்த்தொற்று எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கவில்லை என்றாலும் ஜெர்மனியில் கொரோனா வைரஸ் நிலைமை இன்னும் தீவிரமாகவே உள்ளது என்று அதிபர் அங்கலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார்.

தலைநகர் பெர்லின் உட்பட சில இடங்களில் கட்டுப்பாடற்ற கொரோனா வைரஸ் பரவுவது குறித்து தான் மிகவும் கவலைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

‚தொற்றுக்களின் எண்ணிக்கை அதிவேகமாக வளரவில்லையாயினும் இன்னும் மிக அதிகமாக உள்ளன. எனவே நாங்கள் தொடர்புகளை குறைக்க வேண்டும்’என்று மேர்க்கெல் தான் கலந்து கொண்ட ஒரு வணிக நிகழ்வில் தெரிவித்திருந்தார்

 

உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 14,419 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 267 ஆகவும் உயர்ந்துள்ளது என்று கூறிய அவர், தொற்றுகளின் எண்ணிக்கை ஒரு வாரத்துக்கு முன்பு இருந்த 15,332 ஐ விட குறைவாக இருந்த போதிலும் இறப்பு எண்ணிக்கை 154 இல் இருந்து உயர்ந்துள்ளது என்று Robert Koch Institute (RKI) இன் புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து தெரிவித்திருந்தார்.

முதியவர்கள் மற்றும் இதர நோய்களால் சிகிச்சை பெற்றுவருபவர்கள் உட்பட ஜேர்மனிய மக்களில் சுமார் 30-40% மக்கள் கொறோனா வைரசால் பாதிக்கப்படக்கூடிய நிலைமைகள் உள்ளதென மேலும் தெரிவித்த மேர்கல் கொறோனாவினை கட்டப்பாட்டுக்குள் கொண்டு வருவதே பொருளாதாரத்திற்கும் மிகச் சிறந்த தீர்வு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

ஐரோப்பாவின் பெரும்பகுதியைத் தாக்கும் இரண்டாவது அலைகளை கட்டுப்படுத்த ஜெர்மனி நவம்பர் 2 ஆம் திகதி முதல் ஒரு மாத கால முடக்க நிலைக்கு உத்தரவிட்டிருந்தது.

மதுபான நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ள போதிலும் பள்ளிகளும் கடைகளும் இயங்கு நிலையிலேயே இப்போதும் உள்ளன.

பாடசாலைகளில் முகமூடிகளை அணிவதை கட்டாயமாக்குவததோடு வகுப்புகளின் அளவுகளை குறைப்பது, குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் சமூக தொடர்புகளை மட்டுப்படுத்துமாறு வலியுறுத்துவது உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளை மேர்க்கெல் முன்மொழிந்தார்.

 

முடக்க நிலையை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து சிந்திக்கப்படுவதற்கு முன்னர், ஒரு வாரத்துக்கான வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,00,000 குடியிருப்பாளர்களுக்கு 50 பேர் என்ற அளவிலும் குறைவாக இருக்க வேண்டும் என்று மேர்க்கெல் மீண்டும் வலியுறுத்தினார். சமீபத்திய R.K.I புள்ளிவிவரங்களின்படி, ஜெர்மனியில் தற்போது 1,00,000 குடியிருப்பாளர்களுக்கு 141 தொற்றுக்கள் காணப்படுகின்றன.