கொழும்பு துறைமுகத்தை இயக்க பகீரத முயற்சி!

கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுகத்தின் பணிகள் அடுத்த வாரத்திற்குள் வழமைக்கு திரும்பிவிடும் என்று இலங்கை துறைமுக ஆணைக்குழுவின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகமானது அதிக ஆபத்துள்ள கொரோனா பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தினால் சூழப்பட்டுள்ளது. மேலும், துறைமுகத் தொழிலாளர்களில் 30 சதவீதம் பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

25 சதவீதம் பேர் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். இதனை தவிர 60 வீதமானோருக்கு பீசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தயா ரட்நாயக்க குறிப்பிட்டார்.

இதேவேளை தென்னிந்தியாவுக்கு செல்லவேண்டிய நான்கு கப்பல்கள் கொழும்புக்கு வந்தே பின்னர் தென்னிந்தியாவுக்கு செல்வது வழமையாகும்.

எனினும்; கொழும்புக்கு வருவதாக தெரிவித்த 4 கப்பல்களை நேரடியாக வரவேண்டாம் என்றும் தென்னிந்தியாவுக்கு சென்று கொழும்புக்கு வருமாறும் கேட்டுக்கொண்டதாக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்காது என்றும் ரட்நாயக்க குறிப்பிட்டார்.