பாலும் தேனும் தீர்வும் வழங்கினாராம் டக்ளஸ்?

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையினை தாண்டி யாழில் நடைபெற்ற கூட்டம் காரசாரமான விவாதங்களை தோற்றுவித்துள்ளது.இந்நிலையில் டக்ளஸ் கும்பலோ பாலும் தேனும் கூட்டத்தின் முடிவில் ஓடியதாக அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு அபிவிருத்திசார் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் வழங்கப்பட்டன.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, துறைசார் இராஜாங்க அமைச்சர்கள், வடக்கு மாகாண ஆளுநர், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் ஆகியோர் பங்கேற்று மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கினர்.

நீர்ப்பாசனம்

நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் வழிகாட்டலின்கீழ் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன செழுமை என்ற தலைப்பிலான கிராமிய குளங்களை அண்டியுள்ள 5000 நீர்ப்பாசன தொகுதிகளை மறுசீரமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கையின் பிரதான பொருளாதாரத் துறையாக விவசாயத் துறையை முன்னெடுக்கும் வகையில் இந்த நிர்ப்பாசன திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட பல குளங்கள் அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாக அமைச்சின் செயலாளர் அறியத்தந்தார்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேசத்தில் விவசாயச் செய்கையை மேம்படுத்துவதற்கு அவசியமான பூநகரி குள அபிவிருத்தித் திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மின்சாரம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை மின்சார இணைப்பு வழங்கப்படாதவர்களுக்கான மின்னிணைப்புக்களை 3 தொடக்கம் 6 மாத காலப்பகுதிக்குள் வழங்கிவைக்குமாறு அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ இங்கு குறிப்பிட்டார்.

வீட்டுத்திட்டக் கொடுப்பனவுகள்

கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்டு இதுவரையில் கொடுப்பனவுகள் வழங்கப்படாதிருக்கும் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கான நிதியை கட்டம் கட்டமாக வழங்குவதற்கு அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

தேர்தலை இலக்காகக் கொண்டு அவசர அவசரமாக வழங்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டம் வழங்கப்பட்ட சில காணிகள் தொடர்பில் காணப்படும் உரிமைப் பிரச்சினைக்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு கண்டு அனைவருக்கும் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கிராமிய வீதிகள்

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அடையாளப்படுத்தப்பட்ட பல்வேறு கிராமிய வீதிகள் புனரமைப்புப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதாக அறிவித்த கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் நிமால் லன்ஸா, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் உடனடியாகவே சில வீதி புனரமைப்புப் பணிகள் இன்றையதினமே ஆரம்பிக்கப்படுவதாக அறிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின்கீழ் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை நான்கு வருடங்களில் புனரமைப்புக்கும் திட்டத்தின்கீழ் மேலும் பல வீதிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் புனரமைக்கப்படும் என்றும் அவர் இங்கு உறுதியளித்தார்.

நகர அபிவிருத்தி

நகர அபிவிருத்தி மற்றும் கரையோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை இராஜாங்க அமைச்சின்கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவிருக்கும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள தொடர்பில் துறைசார் அமைச்சின் செயலாளர் இங்கு விளக்கினார்.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பஸ் நிலையங்கள், யாழ்ப்பாணம், சுன்னாகம் சந்தைக் கட்டடங்கள், பருத்தித்துறை மீன் சந்தை உள்ளிட்ட புதிய கட்டுமானத் திட்டங்கள் தொடர்பான விபரங்களை அவர் இங்கு அறியத்தந்தார்.

சூரிய சக்தி, காற்று மின்னுற்பத்தி

இதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் சூரியசக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் மின்னுற்பத்தி செய்யும் புதிய நிலையங்கள் அமைக்கப்படுவதற்கான திட்டங்களை துறைசார் அமைச்சின் செயலாளர் விளக்கிக் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் மற்றும் கிளிநொச்சியில் பூநகரி பிரதேசங்கள் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட முக்கிய இடங்களில் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்யும் நிலையங்கள் விரைவில் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், யாழ்-கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன், விக்னேஸ்வரன், சித்தார்த்தன் ஆகியோருடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சிசபைகளின் தவிசாளர்கள், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.