பள்ளி திறந்து 3 நாட்களில் 575 மாணவர்கள், 829ஆசிரியர்களுக்கு கொரோனா!

ஆந்திரப் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வின்படி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க பள்ளிகளுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் ஒன்றாம் தேதி ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் திறக்கப்பட்ட 4 நாட்களிலேயே 27 அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அம்மாவட்ட கல்வி அதிகாரி நாகமணி, அரசு பள்ளிகளை மூடுமாறு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பின் ஆந்திராவில் கடந்த 2 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆந்திராவில் பள்ளிகள் திறந்து 3 நாட்களே ஆன நிலையில் 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க ஆந்திர மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனிடையே ஆந்திராவில் வரும் 23 ஆம் தேதி 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.