September 11, 2024

வியன்னா தாக்குதலுடன் தொடர்புடையதாக சுவிஸில் இருவர் கைது!

வியன்னா தாக்குதலுடன் தொடர்புடையதாக சுவிஸில் இருவர் கைது!

ஐரோப்பியா நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் சுவிட்சர்லாந்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூரிச்சில் வைத்து 18 மற்றும் 24 வயதுடைய இரண்டு சுவிஸ் நபர்களை பொலிசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

அதே சமயம் வியன்னாவில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சுவிட்சர்லாந்தின் மத்திய புலனாய்வு சேவை (FIS) தெரிவித்துள்ளது.

வியன்னாவில் நடந்த தாக்குதல் குறித்து, மத்திய பொலிஸ் மற்றும் மத்திய புலனாய்வு சேவை தற்போது ஆஸ்திரிய அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்துடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன என்று FIS செய்தித் தொடர்பாளர் இசபெல் கிராபர் கூறினார்,

திங்களன்று, தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் வியன்னா நகரத்தை உலுக்கியது.

இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதல் என்று ஆஸ்திரிய அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் கூறினார். இத்தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஐ.எஸ் குழுவின் ஆதரவாளர் என்று ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் தெரிவித்தார்.

அதே சமயம் ஐ.எஸ்-க்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையில் இணைந்து செயல்படும் ஆஸ்திரியாவுக்கு பதிலடி கொடுக்கும் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜிகாதி குழுக்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது.