டபுள் என்ஜின் அல்ல பிரச்சினை என்ஜின் என்று பிரதமர் மோடிக்கு லாலு பிரசாத் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்!

பீகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் கோட்டையான சப்ராவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் டபுள் என்ஜின் அரசாங்கம் அபிவிருத்திக்கு உறுதி எடுத்துள்ளது. ஆனால் டபுள்-டபுள் யுவராஜ் கூட்டணிக்கு (ராகுல் காந்தி-தேஜஸ்வி யாதவ்) அவரவர் சிம்மானசங்களை பாதுகாப்புவது மட்டுமே கவலை என்று பேசியிருந்தார்.

மோடியின் குற்றச்சாட்டுக்கு, ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். லாலு பிரசாத் யாதவ் தனது டிவிட்டரில், இது பிரச்சினை என்ஜின், டபுள் என்ஜின் அல்ல. லாக்டவுன் காலத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீண்டும் அழைத்து வரும்போது டபுள் என்ஜின் எங்கே இருந்தது என பதிவு செய்து இருந்தார்.

தேஜஸ்வி யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன் ராகுல் காந்தியுடன் இணைந்து தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டபோது, நவம்பர் 9ம் தேதியன்று லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் வெளியே வருவார். அதற்கடுத்த நாள் (10ம் தேதி) தற்போதைய முதல்வர் நிதிஷ் குமாருக்கு பிரியாவிடை அளிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.