April 20, 2024

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை: நீதிக்குக் கிடைத்த வெற்றிகரமான மகிழ்ச்சி – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ளத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

உச்சநீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது போலவே, சிறையில் இந்த 6 பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு விடுதலை செய்து தீர்ப்பளித்து இருக்கிறது.

மே 11, 1999 இல் உச்சநீதிமன்றம் நளினி, சாந்தன், முருகன்,பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. அத்துடன் இவ்வழக்கில் தொடர்புடைய ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பய° ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

மேலும் அக்டோபர் 8, 1999 – இல் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஏப்ரல் 19, 2000 – இல் நளினியின் தூக்கு தண்டனையை குறைக்க முதல்வர் கலைஞர்  அவர்கள் தலைமையிலான அமைச்சரவை தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ததால், நளினியின் தூக்குத் தண்டனை இரத்தாகி, ஆயுள் தண்டனையானது.

மற்ற மூன்று தமிழர்களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் ஆக°ட்-12, 2011 இல் நிராகரிக்கப்பட்டது.

2011 செப்டெம்பர் 9 ஆம் தேதியன்று, அவர்களது உயிர் பறிக்கப்படும் என்று, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், உலகப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்கள், எனது வேண்டுகோளை ஏற்று 2011 ஆக°ட் 30 ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடியதால், நீதி அரசர்கள் நாகப்பன், சத்யநாராயணா அவர்களின் அமர்வு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தடை விதித்தது

இதன் பின்னர்  இந்த வழக்கில் பிப்ரவரி 18, 2014 – பேரறிவாளன் உள்ளிட்ட நால்வர் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தும், ஆளுநர் அந்தக் கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போடுவது போல் போட்டுவிட்டார்.

இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டதாகவும், மத்திய அரசு அதற்கு தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை முந்தைய ஆளுநரும், தற்போதைய ஆளுநரும் நடத்தி வந்தனர்.

இதற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து ஏற்கனவே பேரறிவாளனையும் தற்போது மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்து இருப்பது நீதி வென்றே தீரும் என்பதை நிலைநாட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச்செயலாளர்
10.11.2022 மறுமலர்ச்சி தி.மு.க.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert