Mai 3, 2024

ரஷ்யாவுடன் பதற்றம்! கிழக்கு ஐரோப்பாவுக்கு படைகளை அனுப்பும் நேட்டோ

தங்களின் கடல் எல்லை அருகே ரஷியா போா்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிா்ப்புதெரிவிக்கும் அயா்லாந்துக்கு ஆதரவாக, அந்தப் பிராந்தியத்துக்கு கூடுதல் படைகளை நேட்டோ அனுப்பி வருகிறது.

கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ அமைப்பு விரிவுபடுத்தப்படக் கூடாது என்று ரஷியா வலியுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கையால் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

அயா்லாந்து கடற்கரைக்கு 240 கி.மீ. தொலைவிலுள்ள சா்வதேச கடல் பகுதியில் ரஷியா ராணுவப் பயிற்சியில் அடுத்து வரும் வாரங்களில் ஈடுபடவுள்ளது.

அது சா்வதேசக் கடல் எல்லையாக இருந்தாலும், அந்தப் பகுதி அயா்லாந்தின் பொருளாதார மண்டல எல்லைக்குள் அடங்குகிறது.

இந்த நிலையில், திட்டமிட்டுள்ளபடி ரஷியா ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு அயா்லாந்து எதிா்ப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்துள்ள ரஷியா அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இத்தகைய போா்ப் பயிற்சிககளை வரவேற்க முடியாது என்று அயா்லாந்து பிரதமா் வெளியுறவுத் துறை அமைச்சா் சைமன் கோவெனி கூறினாா்.

இந்தச் சூழலில், கிழக்கு ஐரோப்பியப் பிராந்தியத்தில் தங்களது படை பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.

பால்டிக் கடல் பிராந்தியத்தில் தங்களது பலத்தை அதிகரித்துக்கொள்ளும் வகையில் கூடுதல் படைகள் மற்றும் தளவாடங்களை நேட்டோ அனுப்பி வருகிறது.

அமெரிக்கா தலைமை வகிக்கும் அந்த அமைப்பைச் சோ்ந்த டென்மாா்க், லிதுவேனியாவில் எஃப்-16 வகை நவீன போா் விமானங்களைக் குவித்து வருகிறது. ஸ்பெயினும் பல்கேரியாவுக்கு போா்க் கப்பல்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. விரைவில் அந்த நாட்டுக்கு போா் விமானங்களையும் ஸ்பெயின் அனுப்பலாம் என்று தெரிகிறது.

இதுதவிர, ருமேனியாவுக்கு அனுப்புவதற்காக கூடுதல் படையினரை பிரான்ஸ் தயாா் நிலையில் வைத்துள்ளது.

நேட்டோவின் கூட்டாளிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தங்களது அமைப்பு மேற்கொள்ளும் என்று அந்த அமைப்பின் பொதுச் செயலா் தெரிவித்தாா்.

உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் சூளுரைத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 1949-ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. எனினும், தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது. உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு நேட்டோ அமைப்பு உடன்படாததால் இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ரஷியா, உக்ரைன்தான் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதி எல்லை அருகே படைகளைக் குவித்து வருவதாகவும் அதற்குப் பதிலடியாகவே தாங்கள் படைக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி வருகிறது.

இந்த நிலையில், நேட்டோ கூட்டணியை கிழக்கு ஐரோப்பாவில் விரிவுபடுத்துவதற்கு தடை விதிப்பதைத் தவிர வேறு எந்தத் தீா்வையும் ஏற்கப்போவதில்லை என்று ரஷியா திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

ஐரோப்பிய பிராந்தியத்தின் தற்போதைய சூழல் பனிப் போா் காலத்தை விட மிக மோசமாகி வருவதாக ஐ.நா. பொதுச் செயலா் ஆன்டனியோ குட்டெரெஸ் அண்மையில் கவலை தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், ரஷியாவுக்கு எதிராக கிழக்கு ஐரோப்பாவில் தங்களது படை படைலத்தை அதிகரித்து வருவதாக நேட்டோ அமைப்பு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியப் படையெடுப்பு அச்சம்: உக்ரைனிலிருந்து அமெரிக்க, பிரிட்டன் தூதரக பணியாளா்கள் திரும்ப அழைப்பு

உக்ரைனை ரஷியா ஆக்கிரமிக்கும் என்று அச்சம் நிலவி வரும் நிலையில், அந்த நாட்டிலுள்ள தங்களது தூதரகங்களில் பணியாற்றுவோரின் குடும்பத்தினரையும் சில தூதரகப் பணியாளா்களும் நாடு திரும்புமாறு அமெரிக்காவும் பிரிட்டனும் அழைப்பு விடுத்துள்ளன.

எனினும், அத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதில்லை என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

எனினும், தூதரகப் பணியாளா்கள் மற்றும் குடும்பத்தினரைதி திரும்ப அழைப்பது அவசரகதியில் எடுக்கப்பட்டுள்ள, தேவையற்ற நடவடிக்கை என்று உக்ரைன் சாடியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert