Mai 3, 2024

இலங்கையின் ஜனாதிபதியினால் ஒரு பிரதேச சபையைக் கூட நிர்வாகம் செய்ய முடியாது !

இலங்கையின் ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்சவினால் ஒரு பிரதேச சபையைக் கூட நிர்வாகம் செய்ய முடியாது என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளார்கள். எனவே நாட்டு மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷர்களிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர், முன்னாள் பிரதமர் எஸ்.டப்ள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 123 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்ப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் விளைவினை 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தேன். நான் குறிப்பிட்டதை மக்கள் ஏற்கவில்லை தற்போது அனுபவ ரீதியில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். நாட்டு மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷர்களுக்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் 2019ஆ ம் ஆண்டுக்கு பிறகு இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தொடர்பில் கருத்துரைப்பது பயனற்றதாகும். ஜனாதிபதியால் நாட்டையல்ல ஒரு பிரதேச சபையினை கூட சிறந்த முறையில் நிர்வகிக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துக் கொண்டுள்ளார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது ஜனாதிபதிக்கு மிதமிஞ்சிய வகையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஊடாக பாராளுமன்றிற்கு வழங்கினார். பின்னர் அவர் தலைமையிலான சுதந்திர கட்சியினர் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஊடாக பாராளுமன்றின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி நிறைவேற்று அதிகாரத்தை மீண்டும் ஜனாதிபதிக்கு வழங்கினார்கள். நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert