April 28, 2024

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்காமல் தீர்வு கேட்கும் தமிழர்கள்! பசில் ராஜபக்ச குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் எங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்காமல் அரசியல் தீர்வை கேட்கின்றனர். அரசியலமைப்பு திருத்தத்தை கோருகின்றனர் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் கடந்த ஆட்சியில் மூன்றிலிரண்டு பலம் இருந்த ஆட்சியாளர்களிடம் அரசியல் தீர்வையோ, அரசியல் திருத்தத்தையோ கேட்டுப்பெறவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் உள்ளிட்டோர் ஆதரவு வழங்கிய நல்லாட்சி அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைவிட அதிக பலம் இருந்தது.

ஆனால் அந்த நேரம் எதனையும் கேட்டுப்பெறவில்லை. எனினும் அடுத்து எமது அரசாங்கம் வந்ததும் அதனை கேட்பார்கள். எனவே யாரிடமும் அடிபணியாமல் நாட்டுக்கு பொருந்துகின்ற ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு எங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.