மகிந்த படையினரை கைது செய்வதை தடுக்கும் கோத்தா?

காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்

முன்னதாக, சம்பவம் தொடர்பில் மொரட்டுவை மாநகர சபை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

காலி முகத்திடலில் ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதியான முறையில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், மே 9 அன்று அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் குழுவினால் தாக்கப்பட்டது.

தாக்குதல் நடந்து 8 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் மொரட்டுவை மாநகர சபையின் சிறு ஊழியராவார்.

ஆனால் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போராடிய கிட்டத்தட்ட 400 போராட்டக்காரர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மற்றும் குண்டர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று சமூகமும் வலியுறுத்துகிறது. இந்த நிலையில், புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு தமது கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவுக்கு பணித்துள்ளார்.

ருவான் விஜேவர்தனவும் இது குறித்து தினமும் விசாரித்தும் பலனில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதைத் தடுக்கும் ஒரு சக்தி  இருக்கிறது, அவர் யார் என்பது கேள்வி. இந்தக் கைதுகளைத் தடுக்கும் நபரின் கட்டுப்பாட்டைப் பொறுத்தே புதிய அரசாங்கத்தின் ஆயுட்காலம் அமையும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஏனெனில் இந்தச் சம்பவத்தின் மூலம் நாட்டின் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் வெட்கமின்றி அனைத்து நாட்டு மக்களுக்கும் அம்பலமாகியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.