April 27, 2024

நீதிபதி இளஞ்செழியன் எனது மகளுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுப்பார்!

வவுனியா – பண்டாரிக்குளம், உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஆறு வருடங்கள் ஆகியும் எதுவித நீதியும் கிடைக்கவில்லை என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும் கடந்த ஆறு வருடங்களாக இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒவ்வொரு வழக்குகளும் தவணை இடப்பட்டு  கடந்து செல்கின்றதே தவிர குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை.

இவ்விடயம் குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில்,

பண்டாரிக்குளம் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவியின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த செயலைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இப்படுகொலைக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை.

நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ள குடும்பத்தினர் உட்பட உறவினர்களுக்கு ஆறு வருடங்கள் நிறைவடைந்திருந்த நிலையிலும் நீதி நிலை நாட்டப்படவில்லை. இதனால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளோம்.

ஹரிஸ்ணவியின் குடும்பத்தினர் இதனால் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஹரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையிலும் நாங்கள் போராடி வருகின்றோம்.

இனியும் காலங்களைக் கடத்தி குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு இடமளிக்காமல் நீதித்துறை இப்படுகொலைக்கு உரிய தீர்வு பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

ஹரிஸ்ணவியின் தந்தை கங்காதரன் தெரிவிக்கையில்,

பிள்ளைகள் என்பது இறைவன் கொடுத்த வரம் எங்களுக்கு 2002ஆம் ஆண்டு கிடைத்த ஒரு வரத்தை 2016 ஆம் ஆண்டு இழந்துவிட்டோம். இனிமேல் எனது மகள் எனக்குக்கிடைக்கப்போவதில்லை.

ஆறு ஆண்டுகள் கடந்தும் இன்று வரையில் எங்களின் மகளின் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. இப்படுகொலையைப் புரிந்த அரக்கன் இன்று வரையில் சமூகத்தில் சாதாரண வாழ்க்கை வாழ்கின்றான். அவன் சமூகத்திற்குச் சட்டத்தினூடாக அடையாளம் காட்டப்படவேண்டும்.

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலையைப் புரிந்தவர்கள் எவ்வாறு நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டதோ அவ்வாறு அத்தீர்ப்பை அன்று வழங்கிய நீதிபதி இழஞ்செழியன் ஐயா எனது மகளின் படுகொலையில் தொடர்புபட்டவர்களுக்கு நீதியைக் பெற்றுத்தருவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கு தற்போது கிடைத்துவிட்டது.

ஒவ்வொரு வழக்கு தவணையின்போதும் எமக்கு நீதி கிடைக்கும் என்று எண்ணுவதுண்டு, ஆனால் கடந்த ஆறு வருடங்களாக நீதித்துறையில் எமக்கு இருந்த நம்பிக்கை இழந்துபோய்விட்டது என மேலும் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert