Mai 11, 2024

இரா.சம்பந்தனின் நிலை கவலைக்கிடம்..!!!

இரா.சம்பந்தனின் நிலை கவலைக்கிடம்..!!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எழுந்த உள்ளக முரண்பாடுகளின் எதிரொலியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட ஒருவராக மாறியுள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. தனது பெயரில் ஒரு அறிக்கை வெளியிடவும் முடியாத நெருக்கடி நிலைமைக்கு உள்ளாகியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உருவான உள்ளக மோதல்களின் தொடர்ச்சியாக, எம்.ஏ.சுமந்திரனை கொஞ்சம் தட்டி வைக்கும் முடிவை இரா.சம்பந்தன் எடுத்தார். கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து தன்னை நீக்கமாட்டார்கள் என சுமந்திரன் உநுதியாக நம்பியிருந்த நிலையில், பேச்சாளர் மாற்றப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை இரா.சம்பந்தன் எடுத்தார்.

அதேவேளை, கூட்டமைப்பின் அண்மைய சறுக்கல்களிற்கு எம்.ஏ.சுமந்திரனும் ஒரு காரணம் என இரா.சம்பந்தன் உறுதியாக நம்புகிறார். இதனால், அவரை மட்டும் முன்னிலைப்படுத்திய அணுகுமுறையை அவர் கைவிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பெரும் நிதி வழங்கல் ஆதாரமாக கனடாவிலுள்ள சில குழுக்கள்தான் உள்ளன. பணம் கொடுத்து கூலிப்படை அரசியலை நடத்தும் எத்தனத்தில் அவர்கள் இருக்கிறார்கள். இந்த குழுவினர் கூட்டமைப்பிற்கு பணம் கொடுப்பதாக கூறினாலும், உண்மையில் அப்படியல்ல. அவர்கள் எம்.ஏ.சுமந்திரனிற்கே பணம் கொடுக்கிறார்கள். அந்த பணம் முறையாக கூட்டமைப்பிற்குள் பங்கிடப்படுவதில்லை.

கனடா பணம், எதிர்க்கட்சி தலைவர் வரப்பிரசாதங்கள் என்ற வசதிகளும் இருக்க கடந்த ஆட்சிக்காலத்தில் இரா.சம்பந்தனிற்கு- கூட்டமைப்பிற்கு- ஊடக பணியாளர் இருந்தார். அவரும் எம்.ஏ.சுமந்திரினாலேயே நியமிக்கப்பட்டிருந்தார். எம்.ஏ.சுமந்திரனின் கிறிஸ்தவ மதப்பிரிவில் போதகராக செயற்பட்டவர். எதிர்க்கட்சி தலைவர் பதவி இழந்த பின்னர், அவரும் மத கடமைக்கு திரும்பி விட்டார்.

முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில், அதன் தலைவரின் பெயரில் அடிக்கடி அறிக்கை வரும். அதற்கு முக்கிய காரணம்- கூட்டமைப்பின் சமூக ஊடக மற்றும் ஊடக கட்டமைப்பு எம்.ஏ.சுமந்திரனினால் கையாளப்பட்டு வந்தது.

அண்மைய சம்பந்தனின் நடவடிக்கைகளை தொடர்ந்து, சுமந்திரன் இந்த நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருப்பதாக தெரிகிறது.

அண்மைய நாட்களில் அறிக்கைகள் விட பொருத்தமான உதவியாளர்கள் இல்லாமல் இரா.சம்பந்தன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளார். இரா.சம்பந்தனின் பெயரில் அண்மையில் வெளியான சில அறிக்கைகளுடன் இரா.சம்பந்தன் நேரடியாக தொடர்புபட்டிருக்கவில்லை. அண்மையில் பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்ட அறிக்கை, இரா.சம்பந்தனின் அங்கீகாரத்துடன், அந்த பத்திரிகையே அறிக்கை தயாரித்திருந்தனர். பின்னர் அதன் உள்ளடக்கத்தை அறிந்து, வெளியிட சம்பந்தன் அனுமதியளித்தார். இதேவிதத்தில் வேறும் சில அறிக்கைகள் வெளியாகியிருந்தன.

சில தினங்களின் முன்னர் விவகாரம் ஒன்றில் அறிக்கை வெளியிட அவர் கோரப்பட்டபோது, பொருத்தமானவர் இல்லாமல் திண்டாடுவதாக சம்பந்தன் கூறியதாக தகவல்.

இந்த சூழலில், மாவை சேனாதிராசாவின் பங்களிப்புடன் புதிய அணி மலர்வதையும் அவர் ரசிக்கவில்லையென அறிய முடிகிறது. போதாதற்கு, கூட்டமைப்பின் செயலாளர் என்ற புதிய பதவியினாலும் மேலும் அதிருப்தியடைந்துள்ளார்.

மூப்பு, கைமீறி செல்லும் அரசியல் என இரா.சம்பந்தன் நெருக்கடியிலும், விரக்தியிலும் இருப்பதாக அறிய முடிகிறது.