தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வாக்களிப்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது- மஹிந்த தேசப்பிரிய

 

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதில்  சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிர்வரும் 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அதற்கான சூழ்நிலை இல்லை எனவும் இவ்விடயம்  குறித்து சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  மஹிந்த தேசப்பிரிய  கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கு எவ்வாறு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது என்ற பிரச்சினை காணப்பட்டது.

அதற்கு தீர்வாக எதிர்வரும் 31ஆம் திகதி தனிமைப்படுத்தல் நிலையங்களில் வாக்கெடுப்பினை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.

எனினும் எமது நாட்டில் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான வாய்ப்பினை வழங்குவதற்கான சட்டம் இல்லை. அவ்வாறிருக்கையில் எவ்வாறு முன்கூட்டியே வாக்களிப்பதற்கு ஏனையவர்களுக்கு வாய்ப்பளிப்பீர்கள் என்று பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதன் காரணமாக 31 ஆம் திகதி தனிமைப்படுத்தல் நிலையங்களில் அல்லது வீடுகளில்  தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக வாக்கெடுப்பினை நடத்த முடியாது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வாய்ப்பளிக்காவிட்டால் எவ்வாறு இவர்களுக்கு மாத்திரம் வாக்களிக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆகவே இந்த விடயம் தொடர்பாக  நேரடியாக சட்ட ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.