பிரதமர் மோடிக்கு சமர்ப்பிக்கும் ஆவண வரைபு தயார் : இறுதி ஒப்புதலுக்காக அனுப்பிவைப்பு

இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாகியுள்ள தமிழ் பேசும் கட்சிகளின் கொழும்புச் சந்திப்புகளின் புதிய நகர்வு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

ஊடகங்களுக்கு பெரிதும் பகிரங்கப்படுத்தப்படால் இடம்பெற்றுவரும் இந்த நகர்வுகளின் ஒரு கட்டமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பிப்பதற்கென தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த ஆவண வரைபு கட்சித் தலைவர்களின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு இப்போது கருத்துக்கூற முடியாதென ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஐ.பி.சி தமிழுக்கு குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இந்த வரைபில் 1987 ஆம் ஆண்டு செய்துகொள்ளபப்பட்ட இந்தோ – சிறிலங்கா ஒப்பந்தத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து முஸ்லிம் கட்சிகளுக்கு காணப்பட்ட கரிசனைகளை மையப்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இந்தக் கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த ஆவண வரைபு தொடர்பில் இதன் தொடர்ச்சியாக இன்று தமது இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்களை தொடர்ந்து ஆவண வரைபு இறுதிப்படுத்தப்பட்டு, கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டார்.