April 27, 2024

இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பல இனங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்!

இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பல இனங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.

20ஆம் திருத்தத்திற்கு எதிராக சமூக நீதிக்கான தேசிய இயக்கம், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகளை இணைத்து கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் நடத்திய சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்த நாட்டின் அரசியலமைப்பை கேள்விக்கு உட்படுத்திக்கொண்டு, நிராகரித்துக்கொண்டு

இருப்பவர்களாகிய நாங்கள், ஏன் இந்த அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள 20ஆம் திருத்தத்தை எதிர்க்கும் இந்த நிகழ்வில் உங்களுடன் இணைந்திருக்கிறோம் எனும் கேள்வி சிலருக்கு எழலாம்.

உண்மையில் தமிழர்களை பொறுத்தவரை இலங்கையின் அரசியலமைப்புக்கள் எதுவும் தமிழர்களுக்கு ஒரு போதும் நேர்மையாக இருந்திருக்கவில்லை. இந்த நாட்டில் நிறைவேறிய, பெரும்பான்மைத்துவ வாதத்தை மையப்படுத்திய மூன்று ஒற்றையாட்சி அரசியலமைப்புகளுமே ,அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு ஜனநாயக மீறலாகவேதான் அமைந்திருந்தன.

இந்த அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படுத்தப்பட்ட 17ஆம் 19ஆம் திருத்த சட்டங்கள் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என சொல்லப்பட்ட போதிலும் உண்மையான நடைமுறையில் தமிழர்களுக்கு எதுவித நீதியும் ஜனநாயகப் பாதுகாப்பும் கிடைத்திருக்கவில்லை என்பது தான் உண்மை.

கடந்த 72 வருடமாக, எண்ணிக்கையில் சிறிய இனங்களின் ஜனநாயக உரிமைகளை தொடர்ச்சியாக பறித்து பழக்கப்பட்டுவந்த சிங்கள அரசுகள், இன்று இந்த 20ஆம் திருத்த சட்டத்தின் மூலம் எதுவித கூச்சமும் இன்றி தனது சொந்த மக்களின் ஜனநாயக உரிமைகளிலேயே கைவைக்க தொடங்கியிருக்கிறது.

இன்று உங்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு ஜனநாயக உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்ற போது அதற்கு எதிராக நாமும் உங்களுடன் இணைந்து குரல்கொடுக்க முன்வந்துள்ளோம். மேலும், 20ஆம் திருத்ததுக்கு எதிரான சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துவதுடன் அதற்கான எமது பூரண ஆதரவையும் இத்தால் வெளிப்படுத்துகின்றேன் என்றார்.