Mai 5, 2024

பிரிட்டனில் வரும் திங்கள்கிழமை முதல் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை – போரிஸ் ஜான்ஸன்

பிரிட்டனில் வரும் திங்கள்கிழமை முதல் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்க அந்த நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டமிட்டுள்ளார். கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் கணிசமாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாம் உடனடியாக செயல்பட்டாக வேண்டும். எனவே, சமூகத் தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை நாம் எளிமையாக்கவும், வலிமைப்படுத்தவும் வேண்டும்.

கரோனா தடுப்புக்கான சட்டதிட்டங்களை பொதுமக்கள் புரிந்து கொள்வதும், அவற்றைப் பின்பற்றி நடப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். கைகளைக் கழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கரோனா அறிகுறிகள் இருந்தால் உரிய பரிசோதனை செய்து கொள்தல் ஆகியவற்றை பொதுமக்கள் தவறாமல் செய்ய வேண்டும் என்றார் அவர்.

நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனில் 6 பேருக்கு மேல் குழுமக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், தற்போது 30 பேருக்கு மேல் கூடுவோர் மீது நடவடிக்கை எடுக்கத்தான் போலீஸôருக்கு அதிகாரம் உள்ளது. புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டால், 6 பேருக்கு மேல் கூடினால் கூட அவர்கள் மீது போலீஸôரால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.