வருவது இராணுவ ஆட்சியென்று அமைச்சு பதவி கேட்கிறனர்?

தமிழரசுக் கட்சிக்குள் ஒருமித்த கொள்கையோ ஒருமித்த கருத்தோ இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் முகங்கொடுத்து பேச முடியாதவர்களாக முரண்பட்ட நிலையில் குழப்பங்களுடன் சிதறுப்பட்ட நிலையில் தான் அந்தக் கட்சியினர் இருக்கின்றனர். அந்தக் கட்சியில் இருக்கக் கூடிய சகல வேட்பாளர்களும் நவக்கிரகங்கள் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலைகளுக்குள் நிற்கின்ற நிலை தான் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் பல பேருடைய நாக்கில் சனி துள்ளி விளையாடுகின்றது.

இவ்வாறு தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான சுரேஸ் பிரேமச் சந்திரன் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இன்றைக்கு இருக்கக் கூடிய ஒரே தெரிவாக ஒதுமித்துச் செயற்படுகின்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியே இருப்பதாகவும் அதற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென்றும் கோரியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..
தேர்தலில் பல்வேறுபட்ட அரசியற் கட்சிகளில் அரசாங்கத்திற்கு சார்பாக இருக்கக் கூடியவர்கள் அதே நேரம் அரச சின்னங்களில் கேட்கக் கூடிய கட்சிகளாக சுயேட்சைக் குழுக்களாக இருக்கக்கூடிய பலர் தாங்கள் வென்று வருவதன் மூலம் அரசாங்கத்தைப் பலப்படுத்தலாம் என்று இருக்கின்றார்கள். ஆகவே இப்போது பல தரப்பினர்கள் ஏறத்தாழ எட்டு முதல் பத்திற்குள் அவர்கள் சுயேட்சைகளாகவும் அரசியல் கட்சிகளாகவும் கோத்தபாயவின் அரசாங்கத்தை பலப்படுத்தவதை நோக்கமாகக் கொண்டும் வாக்குகளைப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்டும் களத்தில் இறங்கியிருக்கின்றார்கள்.
ஆகவே தமிழ் மக்கள் ஒரு விடயத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது யுத்தம் முடிவுற்று பத்து வருடங்கள் நிறைவடைந்தாலும் கூட ஆயிரக்கணக்கான நாட்களாக எங்களது தாய்மார் தங்களது பிள்ளைகள் உறவுகளைத் தேடி தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய போராட்டத்திற்கு அரசாங்கம் சொல்லக் கூடிய பதில் மிகவும் ஆணவத் தனமாக அவர்கள் ஒன்றில் இறந்திருப்பார்கள் அல்லது வெளிநாட்டிற்கு தப்பிப் போயிருப்பார்கள் போன்ற விதமாகத் தான்; அமைகின்றது.
ஆனால் உண்மையாகவே அவ்வாறான பதில்கள் காயப்பட்ட மக்களுக்கு வலி சுமந்த மக்களுக்கு மேலும் மேலும் ஒரு வலியை உருவாக்குவதாகத் தான் இருந்து வருகிறது. ஏனெனில் இவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் அல்லர். இவர்கள் நேரடியாக சரணடைந்தவர்கள் அல்லது நேரடியாக வீடுகளிலோ முகாம்களிலோ கைது செய்யப்பட்டவர்கள் பொது மக்களுக்கு முன்னாள் அழைத்துச் செல்லப்பட்டவர்கள். ஆகவே இவர்கள் இறந்திருப்பார்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டிருப்பார்கள் என்ற பேச்சிற்கே இடமில்லை.
அவ்வாறானவர்களுக்கு கூட எதிர்காலத்தில் விமோசனம் நீதி கிடைக்குமா என்ற கேள்வியைத் தான் நாங்கள் இப்போது எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே இவர்களுடைய செயற்பாடுகள் என்பது அதாவது நான் கூறிய எட்டு பத்து கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களின் செயற்பாடுகள் என்பது அவ்வாறான ஒரு மோசமான அரசாங்கத்திற்கு தமிழ் மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நீதியைக் கொடுக்க தயாராக இல்லாத அரசாங்கத்திற்கு மிகவும் திமிர்த்தனத்துடனும் ஆணவத்துடனும் செயற்படுகின்ற அரசாங்கத்திற்கு இன்னும் கூறுவதானால் வடகிழக்கை கிழக்கை ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்குள் அடக்க முயற்சிக்கும் அரசாங்கத்திற்கு வாக்குப் போடுவது என்பது எவ்வளவு சரியானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாhன வாக்குகள் தமிழினத்தினுடைய எதிர்காலத்திற்கு நிச்சயமாக அது பாதகமாக அமையும். அவர்களுக்கு சாதகமாக ஒரு ஆசனம் கிடைத்தால் கூட தங்களது தமிழின விரோத கொள்கைகள் எல்லாத்தையும் தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம் என்ற நிலைப்பாட்டின் அடிபப்படையில் தான் அவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். அதனை இங்கு மாத்திரமல்ல. வெளிநாடுகளில் கூட கூறுவார்கள். அதாவது வடக்கு மாகாணத்திலோ கிழக்கு மாகாணத்திலோ தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றொரு செய்தியை அவர்கள் சொல்லக் கூடும்.
இப்பொழுது இருக்கக் கூடிய முக்கியமான இன்னுமொரு பிரச்சனை என்னவென்றால் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் பொதுக் கூட்டங்களில் பகிரங்கமாகக் கூறுவது என்னவென்றால் தாங்கள் பாராளுமன்றம் சென்று நல்ல அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு வலுவான அமைப்பாக மீண்டும்; பாராளுமன்றம் அனுப்ப வேண்டுமென்று தான் கூறுகின்றார்.
இதுவரை காலமும் அவர்கள் பேசி வந்த தமிழ் மக்களுடைய இறையாண்மை தமிழ் மக்களுக்கான தீர்வு இவை எல்லாம் எங்கே போய் விட்டது என்றொரு கேள்வி இருக்கின்றது. வரக் கூடிய அரசாங்கம் குறித்து ஒரு பக்கத்தில் சொல்வது; இந்த அரசாங்கம் வந்தால் இரானுவ ஆட்சி வருமென்று சொல்கின்றார்கள். ஆனால் இந்த அரசாங்கம் தான் வருமென்பதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட மகிந்த ராஐபக்ச தலைமையிலான புதிய பாராளுமன்றம் உருவாக இருக்கின்றது என்பது தான் பரவலான சிங்கள தமிழ் பிரதேசங்களில் உள்ள கருத்தாகும்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் வரப் போகின்ற ஒரு இரானுவ ஆட்சியில் சுமந்திரன் போன்றோர் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளப் போகின்றதாக கூறி வருகின்றனர். அதாவது ஒரு பக்கத்தில் இரானுவ ஆட்சி வரப் போகின்றது எனக் கூறுகின்றனர். மறுபக்கத்தில் பார்ப்பதானால் எங்களுக்கு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளப் போகிறோம் என்றும் அரசியல் தீரவு எப்பொழுது வருமென்று தெரியாது என்றும் ஆகவே அதுவரை அமைச்சர்களாக இருந்து நாங்கள் அபிவிருத்தியை செய்யப் போகின்றோம் என்ற தொனியில் கருத்து கூறுகின்றனர்.
இந்த விடயத்தில் சம்மந்தன் ஐயாவைப் பார்த்தால் அவர் என்ன கூறுகின்றார் என்றால் இது ஒரு தேர்தல் காலம். அமைச்சர் பதவிகள் பற்றி பேச வேண்டிய அவசியம் இப்பொழுது தேவையில்லை. ஆக தேர்தலிற்கு பிற்பாடு அமைச்சுப் பதவிகள் தொடர்பில் சம்பந்தன் ஐயா கூட பேசுவாரா என்ற கேள்வியும் எழுகின்றது. ஆக மொதத்த்தில் ஒரு பக்கத்தில் அரசாங்கத்திற்கு சார்பாக பல்வேறுபட்ட குழுக்களும் அரசியல் கட்சிகளும் இருக்கின்ற அதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதே பாதையைப் பின்பற்றுகிறதா என்ற கேள்வியும் எழுகின்றது.
அவ்வாறு நிலைமை இருக்குமாக இருந்தால் மக்கள் இந்த விசயம் எல்லாவற்றையும் ஆராய்ந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒன்று மாத்திரம் தான் இப்பொழுது தமிழ் மக்களினுடைய தேசிய இனப்பிரச்சனை தமிழ் மக்களினுடைய இருப்பை பாதுகாப்பதென்பது தமிழ் மக்களுக்கான சரியான ஒரு அபிவிருத்தி திட்டம் முக்கியமாக வேலை வாய்ப்பை மையமாகக் கொண்ட அபிவிருத்தி திட்டம். எல்லாவற்றையும் மையமாக வைத்து செயற்படுகிறது.
இப்பொழுது நடைபெற்றதெல்லாத்தையும் பார்த்திர்களானால் அதில் கம்பரெலிய திட்டம் என்பது அரசாங்கம் கொண்டு வந்த நாடு தழுவிய திட்டம். அது தமிழ் மக்களுக்கும் சில கிராமங்களில் சில வீதிகள் போடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கெல்லாம் இப்பொழுது கூட்டமைப்பு உரிமை கோருகின்றது. இது ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்றில்லாமல் நாடு தழுவிய ரீதியில் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட திட்டமாக இருக்கின்றது.
அந்த வகையில் கூட்டமைப்பு என்பது அரசாங்கத்துடன் இணங்கிப் போக்கக் கூடிய சூழ்நிலையில் ஏனென்றால் அதைத் தான் அவர்களுடைய பேச்சாளர் சுமந்திரன் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார். சும்மந்தன் ஐயா அதனை நிராகரிக்கவில்லை. மாறாக ஒரு தேர்தல் காலத்தில் இதைப் பற்றி பேசத் தேவையில்லை என்று தான் கூறியிருக்கின்றார்.
ஏனென்றால் ஏற்கனவே தமிழரசுக் கட்சிக்குள் பல குழப்பங்கள் இருக்கின்றது. இருக்கக் கூடிய சகல வேட்பாளர்களும் நவக்கிரகங்கள் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலைகளுக்குள் நிற்கக் கூடியதைத் தான் நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் பல பேருடைய நாக்கில் சனி துள்ளி விளையாடுகின்றது.
குறிப்பாக சிறிதரன் சொல்லக் கூடிய சில பிரச்சனைகளைப் பார்த்தால் அதாவது சுமந்திரன் தான் தமிழ் மக்கள் மத்தியில் ஒரே ஒரு அறிவாளி என்றும் அந்த அறிவாளியைக் கைவிட்டால் தமிழ் மக்களுக்கு வேற அறிவாளிகள் கிடையாது என்றும் கூறுகின்றார். சுமந்திரனைக் கேட்டால் நாங்கள் அமைச்சுப் பதவி எடுக்க வேண்டுமென்று கூறுகின்றார். எந்த அரசாங்கம் வந்தாலும் நாங்கள் இருப்போம் அவர்களுடன் பேசி அபிவிருத்தியை செய்ய வேண்டுமென்றும் கூறுகின்றார்.
இப்படிப் பார்த்தீர்கள் என்றால் எல்லோருமே எந்தவிதமான ஒருமித்த கொள்கையோ ஒருமித்த கருத்தோ இல்லாமல் தாங்கள் மாத்திரம் தான் தமிழ்த் தேசியத்தைப் பேசுகின்றோம் என்று சொல்லக் கூடியவர்களாக இருந்த கூட்டமைப்பினர் கொள்கைகளையும் விடுத்து இன்று யாரும் ஒருதருக்கு ஒருவர் முகங் கொடுத்து பேசாமல் ஒரு சிதறிப்பட்ட சூழலில் தான் இருப்பதை நாங்கள் பார்ககக் கூடியதாக இருக்கிறது.
இந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு தெரிவாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இருக்கின்றது. குறைந்த பட்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய அனைவரையும் ஒன்றுபடுத்தி நாங்கள் ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கின்றோம். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைய வேண்டும் என்பதற்காக மிக நிண்ட காலம் முயற்சி செய்தோம். குறிப்பாக சுமார் ஒன்றரை வருடங்களாக முயற்சி செய்து உள்நாட்லும் புலம் பெயர் தேசங்களிலிருந்தும் பல பேர் அவர்களுடன் பேசினார்கள். ஆனால் அவர்கள் அதற்கு ஒத்து வரவில்லை என்பது தான் யதார்த்தம்.
ஆகவே இன்றைய சூழலில் உண்மையான ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம் என்பது மாத்திரமல்ல ஒன்றை தமிழ் மக்களுக்கு மிகத் தெளிவாக நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். அதாவது தேர்தலிற்குப் பிற்பாடு இந்தக் கூட்டணியானது எங்களது கொள்கைகளை ஏற்று வரக் கூடிய ஏனையோரையும் உள்ளடக்குவார்கள். நாங்கள் தமிழ் மக்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டுமாக இருந்தால் எங்களுடைய ஐக்கியம் பலப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது.
யார் என்னத்தைச் சொன்னாலும் தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதென்பது அதற்கு நாங்கள் ஒரு சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதென்பது உள்நாட்டில் அரசாங்த்திற்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பது போன்ற விடயங்களுக்கு எங்கள் மத்தியிலான ஐக்கியம் முக்கியம் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்தில்லை.
ஆகவே நாங்கள் நாடாளுமன்றம் சென்ற பின்பும் இந்தக் கூட்டணி என்பது இன்னும் விரிவுபடுத்தப்படும். இதில் இணங்கி வரக் கூடிய அனைவரும் உள்வாங்கப்படுவார்கள். ஆகவே அந்த வகையில் தான் எங்களுடைய எதிர்காலச் செயற்பாடுகள் இருக்கும் என்பதையும் நாங்கள் கூறிக் கொள்கிறோம். நாங்கள் தனித்து நின்று தனியாகச் சென்று எல்லாவற்றையும் சாதிப்பொம் என்று நாங்கள் கூறவில்லை.
ஓற்றுமையினுடைய அடிப்படை என்பதை ஆரம்பத்திலிருந்தே அதாவது திம்புப் பேச்சுவார்த்தையிருந்து நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். அந்த ஒற்றுமை என்பது எங்களுக்கு பலமாக இருக்கும். திம்புவில் அந்த ஒற்றுமை எங்களுக்கு பலமாக இருந்திருக்கிறது. கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட பொழுது அது எங்களுக்கு பலமாக இருந்திருக்கிறது. ஆகவே ஐக்கியம் என்பது எங்களுக்கு நிச்சமாக பலமான இறுக்கமான நிலையைத் தோற்றுவிக்கும். அது தமிழ் மக்களுக்குத் தேவை.
அந்தவகையில் தேர்தலிற்குப் பிற்பாடு எங்களது கொள்கையை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களுடைய இருப்பைப் பாதுகாக்கக் கூடிய வகையில் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணக் கூடிய வகையில் நாங்கள் இணைக்கக் கூடிய அனைவரையும் இணைப்பது மாத்திரமல்ல பாராளுமன்றத்தில் ஏனைய சிறுபான்மை இனங்களான முஸ்லிமோ மலையத் தமிழர்களோ அவர்களுடைய எங்களுடைய கோரிக்கைகளுக்காக நாங்கள் எங்களால் இயலுமானவரை அவர்களையும் இணைத்துச் செயற்படுவது தான் எங்களுடைய நோக்கம்.
இந்த விடயங்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மிகத் தெளிவாக இருக்கின்றது. ஆகவே இன்னும் இரண்ட வாரங்கள் தேர்தலுக்கு இருக்கின்ற நிலையில் தமிழ் மக்கள் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையினால் சுயேட்சைகளுக்கோ ஏனையவர்களுக்கொ வாக்களித்து இந்த நிலவரங்களைக் குழப்பாமல் ஒருமித்து நின்று மீன் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியைப் பலப்படுத்துவதன் ஊடாக நிச்சமாக சரியான பாதையில் சரியான வழிமுறையை நாங்கள் எடுக்க முடியும்.
எதிர்காலத்தில் நாங்கள் இவற்றையெல்லாம் திட்டமிட்டு முன்னே கொண்டு செல்ல முடியுமென்று நம:புகின்றோம். ஆகவே தமிழ் மக்கள் தங்களுடைய முழுமையான ஆதரவை தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு வழங்க வேண்டுமென்று வேண்டி நிற்கின்றோம் என்றார்.