November 23, 2024

முள்ளிவாய்க்காலில் சுயவிளம்பரப்படுத்தல் வேண்டாம்!

 தமிழின படுகொலை நினைவேந்தல் நாள் அழைப்பு.                           2009ஆம் ஆண்டு இதேதினங்களில் ஈழத்தமிழினத்தை  துடிக்கத் துடிக்க , துடைத்தழித்து அவ் இன அழிப்பின் மூலம் இனச்சுத்திகரிப்பொன்றை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க சிறீலங்காவின் பாசிச அரசு  தனது இரத்த வெறிபிடித்த இராணுவத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தது என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்புதெரிவித்துள்ளது.

மே18ம் திகதிய நினைவேந்தலிற்கு அழைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்  உலக வல்லாதிக்க தேசங்களும் ,இன விடுதலைக்காக போரிட்ட தமிழினத்தை   சிறீலங்காவின் அரச பயங்கரவாதம் உலகினால் மனிதகுலத்திற்கு எதிராக பயன் படுத்த முடியாதென தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் போர்முறைகளையும் கொண்டு கொன்றொழித்து தமிழின அழிப்பொன்றை அரங்கேற்றுவதை வெறுமனே பார்த்து நின்றதுடன் மறைமுகமாக ஆதரவையும் வழங்கின .பாதுகாப்பு வலயங்கள் என்று அரசினால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்ச மடைந்த அப்பாவி மக்களையும் காயமடைந்து வைத்தியசாலைகளில் தஞ்சமடைந்த மக்களையும் செல்வீசியும் கொத்துக்குண்டுகளை வீசியும் இனவெறி இராணுவம் கொன்றொழித்தபோது ஐ.நா சபையும் ஏனய சர்வதேச தொண்டு நிறுவனங்களும் இம்மண்ணில் தங்கள் பிரசன்னத்தை வெறுமைப்படுத்திக் கொண்டன.போதிய உணவனுப்பாது , காயமடைந்தவர்களுக்கு மருந்தனுப்பாது  மிகக்குரூரத்தனமாக தமிழின அழிப்பை சிறீலங்கா அரசு மேற்கொண்டபோது இந்த ஜனநாயக உலகம் வெறுமனே பார்த்து நின்றது.

 இன்று வரை நீதி வழங்கப்படாத இவ் இன படுகொலையின் 13 ம் ஆண்டிற்கான  நினைவேந்தல் 2022. 05. 18 இல்  முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும்.            எனவே அனைவரும் பேதங்களைத்துறந்து , சுயலாப அரசியல் , சுய விளம்பரப் படுத்தல்களைக் கடந்து எமது பொது நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு தமிழர்களாக இந் நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.            அத்துடன் அன்று மாலை 6மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் ,கோவில்களிலும் மணி ஒலி எழுப்புவதுடன் அன்று இயலுமான வரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பினை நினைவு கூருவோம் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்புதெரிவித்துள்ளது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert