November 23, 2024

ரணில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கமாட்டோம்: காலையும் வாரமாட்டோம்! மனோ

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும், அந்த அரசை உடனடியாக காலில் இழுத்து வீழ்த்தும் எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கவும் மாட்டோம் எனவும் குறிப்பிட்டார்

பொது மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு குறைந்தபட்ச தீர்வுகளை காண புதிய அரசுக்கு அவகாசம் தேவை என்பதை நாம் ஏற்கிறோம்.

தமது அரசில் பங்கேற்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க எமக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்புக்கு நன்றி கூறி, கொள்கை அடிப்படையில் அதை நாம் நாகரீகமாக மறுத்து விட்டோம். 

ஆனால் அதற்காக நாம் கட்சி அரசியல் செய்து கூச்சல், குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை. வாழ்வாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க அவரால் இயன்றதை பிரதமர் செய்யட்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூட்டணியின் முடிவை அறிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க, எமது முன்னாள் பிரதமர். அவரது பலமும், பலவீனமும் எமக்கு நன்கு தெரியும். பலவீனம் பற்றி இப்போது பேசி ஜனரஞ்சக அரசியல் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணியில் எவரும் விரும்பவில்லை. 

சர்வதேச தொடர்பாடல் தொடர்பான, ரணிலின் பலம் மூலம் நாட்டுக்கு நன்மை நடக்குமாயின் அதை நான் முழு மனதுடன் வரவேற்கிறோம்.

இன்று நாட்டில் உணவு இல்லை. மருந்து இல்லை. எரிவாயு இல்லை. எரிநெய் இல்லை. உரம் இல்லை. மின்சாரம் இல்லை. 

இவற்றுக்கு குறைந்தபட்ச தீர்வுகளையாவது அவர் தரவேண்டும். பிரதமர் அதை செய்யட்டும். அதற்கு பொறுப்புள்ள கட்சியாக நாம் இடம் கொடுப்போம். 

ஆகவே இன்றைய சூழலில், பாராளுமன்றத்தில் அவரது அரசின் காலை இழுத்து விடும் எந்தவொரு முயற்சியையும் நாம் ஆதரிக்க மாட்டோம்.

நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. நமது நாடு வாங்கியுள்ள கடன்களை உரிய காலத்தில் திருப்பி செலுத்த முடியாதுள்ளது. ஆகவே கடன் தந்தோரிடம் பேசி கடன் திருப்பி செலுத்துவதை மறு அட்டவணை படுத்த வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளை பெற அமெரிக்க டொலர் இல்லாமல் உள்ளது. இதற்காக நட்பு நாடுகளிடம் கடன்வழி உதவிகளை, நாணய மாற்று உதவிகளை பெற வேண்டும். இந்தியா இவற்றை ஏற்கனவே வழங்கி வருகிறது. 

இவை இன்னமும் அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே உதவி தரும் நட்பு நாட்டு குழுமம் (Consortium) ஒன்றை ஏற்படுத்த பிரதமர் முயற்சி செய்கிறார். இது நல்லது. வரிகொள்கை சீரமைக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்புரீதியாக, குறைந்தபட்சம், 20 ஐ வாபஸ் வாங்கி, மீண்டும் 19 ஐ கொண்டு வர வேண்டும். நாட்டின் குரலுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக ஒரு கால அட்டவணை தயாராக வேண்டும். இனிமேல் ராஜபக்சர்களுக்கு இந்நாட்டு அரசியலில் இடம் தர மக்கள் தயாரில்லை. இதை பிரதமர் புரிந்துக்கொண்டுள்ளார் என நம்புகிறோம் என்றார்.

இதேநேரம் ரணில் விக்ரமசிங்க விலைபோய்விட்டார். அவர் ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்கமுடியாது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert