April 27, 2024

புத்தர்சிலை பிரதிஸ்டை பிற்போடப்பட்டது!

குமுழமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுவரும் குருந்தாசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

பிரதேச தமிழ் மக்களால் வழிபட்டுவந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலையில் இருந்த ஐயனார் ஆலயத்தின் சூலம் உடைத்து எறியப்பட்டிருந்தது.அதன்பின்னர் அங்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தடைவிதிக்கப்பட்ட பின்னர் குறித்த பகுதி இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவரப்படடிருந்தது.

அங்கு தொல்லியல் அகழ்வாராட்சி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த அதே நேரத்தில் அங்கு பௌத்த விகாரை ஒன்றும் புராதன காலத்தை ஒத்த வடிவில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வந்தது.

அத்தோடு குருந்தூர் மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பயிர்ச் செய்கை நடவடிக்கைக்கு பௌத்த பிக்கு மற்றும் தொல்லியல் திணைக்களத்தினாரால் தடை விதிக்கப்பட்டதோடு தண்ணிமுறிப்பு கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலங்களையும் பௌத்த விகாரைக்குரிய நிலமாக வழங்குமாறு கோரி பௌத்த பிக்குவால் கோரிக்கையும் முன்வக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு தமிழ் மக்கள் யாரும் செல்வதற்கு இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தடை ஏற்படுத்தி வந்திருந்தது

இந்நிலையில் தொல்லியல் ஆய்வுப்பணிகள் இடம்பெற்றுவந்த சம நேரத்திலேயே அங்கு மிக பிரமாண்டமான முறையில் புராதன கால செங்கற்களை ஒத்த செங்கற்கள் செய்யப்பட்டு குருந்தூர் மலைக்கு கொண்டுவரப்பட்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் இரவு பகலாக கட்டுமானம் இடம்பெற்றுவந்தது.

இந்த நிலையில் தற்போது விகாரை அமைக்கும் வேலை முற்றுப்பெறும் நிலையை அடைந்துள்ளதால் விகாரையின் உச்சியில் உள்ள கலசத்தில் பூசை வழிபாடுகளை செய்யும் நிகழ்வும் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் இடம்பெறஇருந்தது.

இந்நிலையில் தமிழ் மக்களது எதிர்ப்பினையடுத்து புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வு இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert