Mai 3, 2024

த- பேசும் ம- ஆளும் தகுதியை சிங்களத் தலைவர்கள் பேரின ஓரின அடிப்படைவாதத்தால் தாமாக இழந்துவிட்டார்களா? ஜி. ஸ்ரீநேசன்,

தமிழ் பேசும் மக்களை ஆளும் தகுதியை சிங்களத் தலைவர்கள் பேரின ஓரின அடிப்படைவாதத்தால் தாமாக இழந்துவிட்டார்களா?

74 வருடகால ஆய்வு தரும் செய்தி.

ஜி. ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு.

   பல்லின மக்கள் வாழும் நாடுகளை ஆளுகின்ற தலைவர்கள் சகல மக்களையும் அரவணைத்து ஆளுகின்ற ஆளுமை,பக்குவத்தினைக் கொண்டிருக்க வேண்டும்.மாறாக தமது இனம்சார்ந்த மக்களை மாத்திரம் அரவணைத்து ஏனைய மக்களைப் புறந்தள்ளி ஆளும் போக்குக் காணப்பட்டால் அவர்கள் ஓரினத்தின் தலைவர்களாக மட்டுமே கணிக்கப்படுவர்.

இலங்கையைப் பொறுத்தவரை சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி செய்த சிங்களத் தலைவர்கள் அனைவரும் 74 சதவீதமான தமது சிங்கள இனத்தவருக்குச் சார்பான ஜனநாயகத்தை அல்லது இன நாயகத்தையே பின்பற்றி ஆட்சி செய்துள்ளனர்.இதனை இலங்கையின் ஜனநாயகம் என்று கூறுவதை விட சிங்கள இனநாயகம் என்றே கூறலாம்.

   தேசபிதா என்று கூறப்படும் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க அவர்கள் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை குடியுரிமைகளைப் பறித்து தமிழர்களுக்கு எதிரானவராகத் தன்னைக் காட்டினார்.மேலும் கல்லோயா சிங்களக் குடியேற்றத்தினையும் திட்டமிட்டு செய்துள்ளார்.
     பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 1956 இல் தனிச்சிங்களச் சட்டம்,1957 இல் பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்டமை,1958 இல் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புக் கலவரம் என்று அடுக்கடுக்காக இனவாத செயல்கள் நடைபெற்றன. 

    1965 இல் ஆட்சிக்குவந்த டட்ளி சேனநாயக்கா இனப்பிரச்சினைக்குத் தீர்வாக டட்லி- செல்வா ஒப்பந்தம் ஒன்றினைச் செய்து பின்னர் அதனைக் கைவிட்டார்.சிங்களத்தலைவர்களில் மென்மையானவர் என்று பேசப்பட்டவரும் தமிழர்களை ஏமாற்றியுள்ளார்.       
         1970 இல் ஆட்சிக்கு வந்த ஸ்ரீமாவோ சிங்களம்,பௌத்தமைய அரசியல்யாப்பினை 1972 இல் கொணர்ந்தார்.தமிழையும், தமிழர்களையும் முழுமையாகப் புறக்கணிக்கார்.தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமிழ் பேசும் மக்கள் சார்பாகச் சமர்ப்பித்த சாதாரணமான ஆறு அம்சக்கோரிக்கையினை நிராகரித்துவிட்டார்.இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர் டி சில்வா தலைமையில்தான் இந்த இனவாத மதவாத அரியல் யாப்பு வரையப்பட்டது.இந்த இடதுசாரிகள் ஶ்ரீமாவின் அரசாங்கத்தில் இணைந்து காணப்பட்டனர்.அந்தவகையில் இடதுசாரிகளும் பதவிக்காக இனவாதிகளிடம் சோரம் போயுள்ளனர்.1956இல் ஒருமொழி என்றால் இருநாடு என்ற கொல்வின் ஒருமொழியாகச் சிங்களத்தைக் கொணர்ந்து இரு நாடாவதற்கு வழிவகுத்தார்.அதன் பின்னர்தான் தனிநாட்டுக்கோரிக்கை தமிழர் ஐக்கி விடுதலை முன்னணியால் 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம் நிறைவேற்றப்பட்டு 1977 பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் மக்களாணை பெறப்பட்டது.1972 தயாரிக்கப்பட்ட அடிப்படைவாத அரசியல்யாப்பு தனிநாட்டுக்கோரிக்கைக்கு முக்கிய காரணமாக இருந்தது.
   அதன் பின்னர் ஆட்சிப்பீடமேறிய ஆசியாவின் பெருநரியரான ஜே.ஆர். ஜெயவர்தனா தமிழர்களை மோசமாக ஒடுக்குவதற்காக 1979 இல் கொடுமையான பயங்கரமான பயங்கரவாத்த் தடைச் சட்டத்தினைக் கொண்டு வந்தார்.இந்த மனித குலத்திற்கு எதிரான சட்டம் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களை பலியெடுத்துள்ளது,பழி வாங்கியுள்ளது. இவரது காலத்தில் தான் மோசமான கறுப்பு யூலைக் கலவரம்1983இல் நடைபெற்றது. இதன் போது 3000 தமிழர்கள் சிங்களக் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள்.அரச பாதுகாப்பில் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 52 தமிழ் அரசியல் கைதிகள்,போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர்.இவர்தான் கண்டிப்பாத யாத்திரை மூலம் சிங்களமக்களைத்தூண்டி பண்டா-செல்வா ஒப்பந்தம் கைவிடப்படுவதிலும் முக்கிய சூத்திரதாரியாக இருந்தார்.
 மேலும் ஆர்.பிரேமதாச அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது. இதன் போது சட்டரீதியான படையாலும், சட்ட விரோதமான ஆயுததாரிகளாலும் அப்பாவித் தமிழர்கள் பலர் கொத்தணி கொத்தனியாக வடக்கு - கிழக்கில் கொல்லப்பட்டார்கள். சத்துருக் கொண்டான், கிழக்குப் பல்கலைக்கழக முகாம் படுகொலை, வீரமுனைப்படுகொலை எனப்பல படுகொலைகள் தங்குதடையின்றி நடைபெற்றன.அக்காலத்தில் கொளக்கொட்டியா என்னும் சட்ட விரோத ஆயுததாரிகள் தமிழின அழிப்பில் ஈடுபட்டதாக்க் கூறப்பட்டது.
   1994 இல் சந்திரிக்கா அம்மையார் சமாதானத் தேவதையாக தமிழர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தார்.அவர் காலத்தில் செம்மணிஅப்படுகொலை, ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலமாகப் பல தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.இவர் காலத்தில் ஒரு சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 2005 இல் மகிந்த ஜனாதிபதியானார்.இவரது ஆட்சிக்காலத்தில் கொடுமையான யுத்தம் மேற்கொள்ளப்பட்டது. காணாமல் ஆக்கப்படுதல், ஊடகவியலாளர்கள் படுகொலை, ஆட்கடத்தல்கள்,தமிழ்த் தலைவர்கள், புத்திஜீவிகள் படுகொலைகள் பல நடைபெற்றன.இறுதியுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.காணாமல் ஆக்கப்பட்டனர்.சரண்டைந்தவர்கள்,ஒப்படைக்கப்பட்டவர்கள்,கடத்தப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.மொத்தத்தில் காட்டாட்சி நடைபெற்றது,காட்டுச்சட்டம் பிரயோகிக்கப்பட்டது.சிங்கள இனநாயகம் சீறிப்பாய்ந்து யுத்தத்தின் பின்னர் 13 பிளசுக்கும் அப்பால் சென்று அரசியல் தீர்வு வழங்கப்போவதாகக் கூறி அப்போதைய ஐ.நா.செயலாளர் பான்கீ மூனிடம் உத்தரவாதம் அளித்தார்.ஆனால் ஏமாற்றமே மிச்சம்.
எதுவும் நடக்கவில்லை.

அதன் பின்னர் 2015 இல் ஆட்சிக்கு வந்த மைத்திரி ரணில் கூட்டணி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு மூலம் இனப்பிரச்சினைக்குத்தீர்வு வழங்குவதாகக் கூறியது.ஆனால் அதுவும் மந்தகதியில் நடைபெற்று மைத்திரி மகிந்த கூட்டுச்சதியால் முற்றுப்பெற்றது.ரணிலும் மந்தமான செயற்பாட்டர்களராகவே இயங்கினார். தற்போது ஆட்சியிலுள்ள பொதுசனப் பெரமுன மூலம் 2019 இல் ஆட்சிப்பீடமேறிய கோத்தா,மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சிங்கள பெளத்த அடிப்படைவாத செயற்பாடுகளை வெளிப்படையாகச் செய்து வருகின்றார்கள்.ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி,தொல்லியல் செயலணி,புதிய அரசியல் யாப்புச் செயற்பாடு,சிவில் அதிகாரிகள் நியமனம்,காணிக்கையாளுகை அனைத்தும் சிங்கள பெளத்தமையச் செயற்பாடுகளாகவே அமைகின்றன. தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய தான் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதை அடிக்கடி கூறிக்கொண்டு அடிப்படை வாதப் போக்கில் செயலாற்றுகின்றார். 

  அந்தவகையில் 74 ஆண்டுகளாக எந்தச்சிங்களத் தலைவராலும் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை.தற்போதைய ஜனாதிபதி இலங்கையில் இனப்பிரச்சினையே இல்லை அபிவிருத்திப்பிரச்சினை மட்டுமே உள்ளதாகக் கூறுகின்றார். சமத்துவ உரிமையற்ற இரண்டாந்தரப் பிரசைகளாக தமிழர்கள் கைகட்டி வாய்பொத்தி வாழ வேண்டும் என்பதே சிங்கள அடிப்படைவாத நிலைப்பாடாகும்.இல்லை என்றால் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதே வக்கிர இனவாத சிந்தனையாகும்.இதுவரை 15 இலட்சம் தமிழர்கள் நாட்டுக்கு வெளியே 

புலம் பெயர்ந்து வாழ்கின்றார்கள்.சமத்துவ உரிமை இல்லாததாலும்,இன ஒடுக்கு முறையாலுந்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள் என்பதை இன்னும் பேரினவாத ஆட்சியாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். சோறும் தண்ணீருந்தான் தமிழர் பிரச்சினை என்பது பேரினவாதிகளின் நையாண்டித்தனமான நிலைப்பாடாகும்.எனவே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை சிங்களத் தலைவர்கள் தீர்க்க மாட்டார்கள் என்பதே வரலாற்று உண்மையாகும். இதனால்தான் தமிழர்களை ஆளுந்தகுதியை சிங்களத் தலைகள் தாமாகவே இழந்துள்ளார்கள். எனவேதான் தம்மைத்தாமே ஆளும் உள்ளக சுயநிருணய உரிமையினை தமிழ்மக்கள் இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் வாழ்வுரிமை,சுயகௌரவம் அடிப்படையில் கோருகின்றனர்.தமிழ் பேசும் மக்களை வாழவும் விடாமல் தம்மைத்தாமே ஆளவும் விடாமல் சிங்கள ஆட்சியாளர்கள் தடுப்பது நியாயமாகாது.முன்னைய யுகோஸ்லாவியாவின் ஜனாதிபதி மிலோசபிக் சேர்பிய இனவாதியாக இருந்து தமது நாட்டிலுள்ள சிறுபான்மையரான அல்பேனியர் குறேசியர்களை படைகள் மூலமாக இனவழிப்புச் செய்தார்.இறுதியில் ஐக்ககிய நாடுகள் சபை மூலமாக படைகள் அனுப்பப்பபட்டன.சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.அவர்களை ஆளத்தெரியாத இனவழிப்புச் செய்த மிலோசபிக் கைதுசெய்யப்பட்டு சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டார்.பின்னர் தடுப்புச்சிறையிலே மிலோசபிக் மரணித்தார்.பல படையதிகாரிகள் ஆயுட்கால சிறைத்ததண்டனை பெற்றார்கள்.சிறுபான்மைத்தேசிய மக்களின் தன்னாட்சி உரிமை ஏற்றுக்ககொள்ளப்பட்டு தனியரசுகள் உருவாக்கப்பட்டன.இவை ஏறத்தாழ எமது நாட்டுப் பிரச்சின்னை போல் அமைந்துள்ளது.முறையான சமஷ்டி மூலமாக அல்லது அதற்கு மேல் சென்று தமிழ்பேசும் மக்களின் சுயநிருணய உரிமை வழங்க வேண்டும் என்பதை இந்தியா உட்பட சர்வதேச சமூகம் இனியாவது உணர்ந்தாக வேண்டும்.74 ஆண்டுகளாக தமிழர்களை சமத்துவமாக ஆளத்தெரியாத பாரபட்சமான அடிப்படைவாத சிங்கள பௌத்த தலைவர்களுக்கு அதுவே வரலாற்றுப்பாடமாக அமைய முடியும்.தமிழர்களை வாழவிடாத அடிப்படைவாத்த் தலைவர்களுக்குரிய செயதியாக தமிழர்கள் தம்மைத்தாமே ஆளவிட வேண்டிய வரலாற்றுத் திருப்பம் உருவாகியள்ளது.பல்லின மக்களை ஆளத்தெரியாத தலைவர்களுக்கு இது பாடமாக அமையவேண்டும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert