Mai 4, 2024

தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தி, „மேம்படுத்தப்பட்ட பாடநூல்“

தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தி, „மேம்படுத்தப்பட்ட பாடநூல்“ என்ற பெயரோடு, அனைத்துலகத் தமிழர் கல்விப்பேரவை என்ற அமைப்பு கடந்த 05.06.2021 அன்று வெளியிட்ட பாடநூலை மீளப்பெறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி; „வெளிப்படைத்தன்மைக்கும் பொறுப்புக்கூறலுக்குமான புலம்பெயர் தமிழர் அறக்கட்டளை“ எனும் அமைப்பானது Zoom ஒன்றுகூடலை நேற்று (21.08.2021)நடாத்தியது.

இவ்வொன்றுகூடலில்; கனடா, யேர்மனி, அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து பலர் கலந்துகொண்டு தமது கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

ஆரம்பஉரையினையும், இந்நிகழ்வின் குறிக்கோளையும், நிகழ்வைத் தலைமையேற்று நடாத்திய; யேர்மனியத் தமிழ்க்கல்விக் கழகத்தின் முன்னாள் மாநிலப்பொறுப்பாளராகக் கடமையாற்றிய திரு.வலன்ரைன் அவர்கள் தெளிவாக எடுத்துரைத்தார். திரிபுபடுத்தப்பட்ட பாடநூலில் இடம்பெற்றுள்ள தவறான, சரித்திரச் சான்றுகளுக்கு அப்பாற்பட்ட தகவல்கள் மீளப்பெறப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். இது தொடர்பாக நூலாக்கற் குழுவிற்கு கடிதம் அனுப்பியபோதும் எவ்விதபதிலும் கிடைக்கவில்லையென்றும், இந்நிகழ்விற்கு பகிரங்கமாக அழைத்தும் எவரும் பங்குபற்றவில்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து; உரை நிகழ்த்திய யேர்மனியத் தமிழ்க்கல்விக் கழகத்தின் முன்னாள் மாநிலப்பொறுப்பாளர் விசயகுமார் ; இந்நூலில் இடம்பெற்றிருக்கும் வரலாற்றுத் திணிப்பானது திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும், கட்டுக்கதையான மகாவம்சத்திற்கு முன்பான காலத்திலிருந்தே இயக்கர் நாகர் என்ற பெயருடன் வாழ்ந்தவர்களே தமிழர்கள் என்பதைச் சுட்டிக்காட்ட ஏராளமான சான்றுகள் இருந்தும், எம்தாய்மொழியான தமிழை ஏதோ வந்தேறுமொழிபோல பாடநூலில் சுட்டிக்காட்டியிருப்பது, இவர்களின் மேல் பலத்த சந்தேகத்தை உண்டுபண்ணுவதாகவும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து பங்குகொண்ட தமிழின உணர்வாளர் மைக்கேல் அவர்கள்; காலத்திற்கேற்ப நூலை மாற்றம் செய்வது தவறில்லை என்பதோடு, ஏலவே இயங்கிவருகின்ற பாடத்திட்டத்தில் காலத்திற்கேற்ப சிறு மாற்றங்களைச் செய்து வெளியிட்டிருக்க முடியும் எனவும் தெரிவித்தார். 2009 இல் தமிழீழத்தில் இனப்படுகொலை நிகழ்ந்துகொண்டிருந்தவேளை; இலங்கையின் சனாதிபதியான மகிந்த இராசபக்சவை அழைத்து, கைலாகு கொடுத்துக் கொண்டாடிய அப்துல் கலாம் வரலாறு எமக்குத்தேவையற்றது என்பது அவரது உறுதியான கருத்தாக அமைந்தது.

யேர்மனியின் Hamburg பல்கலைக்கழக ஆய்வாளர் திரு.மதிமாறன் அவர்கள், திரிபுபடுத்தப்பட்ட பாடநூலை வெளியிட்ட அமைப்பினரை நோக்கி பத்துக்கேள்விகளை முன்வைத்தார்.

1. ஏலவே நடைமுறையிலிருந்த பாடத்திட்டத்தை அவசரமாக நீக்க வேண்டிய காரணம் என்ன ?

2. பாடநூல் மேம்படுத்தவேண்டிய அவசர சூழ்நிலை என்ன ?

3. இது தொடர்பாக ஆசிரியர்கள், புத்திசீவிகளது கருத்து பரந்தளவில் பெறப்படாதது ஏன் ?

4. இதற்கான நிதி பெறப்பட்ட மூலம் யாது ?

5. ஈழத்தமிழழர்களிலேயே எமது வரலாற்றைத் திறம்பட எழுதக்கூடிய பல புத்திசீவிகள் இருக்கையில்; திட்டமிட்டே தமிழக, மலேசிய , சிங்கப்பூர் பேராசிரியர்கள் நுழைக்கப்பட்டது ஏன் ?

ஆகியன திரு.மதிமாறன் அவர்களது கேள்விகளாக அமைந்தன.,

கனடா நாட்டிலிருந்து இளையோர் சார்பாகக் கருத்துரைத்த தமிழின உணர்வாளர் ஆதவன் அவர்கள்;கனடாவிலுள்ள மாணவர்கள் கல்விகற்கின்றபோது மாவீரர் நாள் பற்றியோ அன்றி முள்ளிவாய்க்கால் பற்றியோ எவ்வித விளக்கங்களும் கொடுக்கப்படாதிருப்பதோடு, பாடநூல்களிலும் இவற்றை நீக்கிவிட்டால் ஈழத்தமிழர் வரலாறு பற்றி இளம் சந்ததி கற்றுக்கொள்ள வாய்ப்பே இராது என்பது மனவேதனைக்குரிய விடயம் என்பதையும், இப்பாடநூல் மீளப்பெறப்படவேண்டும், என்பதையும் வலியுறுத்தினார்.

தமிழின உணர்வாளரும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டுள்ள திரு.ஜெயந்தன் அவர்கள்; இது திட்டமிட்டுத்திணிக்கப்பட்ட பாடநூல் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். போராட்டமின்றி தமிழருக்கு வரலாறு இல்லையென்பதையும், அந்தவரலாறுதான் தமிழர்களது வழிகாட்டி என்பதை இப்பாடநூல்கள் மூடிமறைக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

யேர்மனியிலிருந்து தேவன் குறிப்பிட்டதாவது; ஐரோப்பிய நாடுகளில் இசுலாமியப் பள்ளிவாசல்களில், அரபுமொழியில் இசுலாமியச் சிறார்களுக்குக் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை மொழிபெயர்த்துத்தருமாறு எந்நாட்டு அரசும் வலியுறுத்தியதில்லை. ஆனாலும் இசுலாமிய அமைப்புகளை ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் கடுமையாக நோக்குகின்றன. ஆனால்; உலகில் எங்குமே பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஈழத்தமிழர் போராட்டங்களையும் , வரலாறையும் பாடமாகக் கற்பிப்பதில் என்ன தடை இருக்கப்போகிறது என வினா எழுப்பினார். ஏனெனில் யேர்மனிய அரசானது பாடநூல்களை மொழிபெயர்த்துத்தரமாறு தம்மிடம் கேட்டதாக, பொய்க்கதையினை உருட்டித்திரியும் யேர்மன் கல்விக்கழகப்பொறுப்பாளர் லோகன் என்பவர், எமது போராட்டத்தை பயங்கரவாதம் என மறைமுகமாக அடையாளப்படுத்துகிறாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

இறுதியில் தொகுப்புரை வழங்கிய திரு.வலன்ரைன் அவர்கள்; திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்கள் மீளப்பெறப்படும் வரை எமது போராட்டம் தொடருமென்பதையும், அதற்குமப்பால், இந்த இடத்தில் நாம் எதிர்த்துக் குரலெழுப்பினோம் என்பதை வரலாறு நேர்த்தியாகப் பதிவுசெய்யும் என்பதையும் கூறியதோடு, வெகுவிரைவில் இதுதொடர்பாக வரலாற்றாசிரியர்கள், புத்திசீவிகள், ஊடகவியலாளர்கள், ஆகியோரை இணைத்து விரைவில் அடுத்தகட்ட Zoom ஒன்றுகூடல் நடைபெறுமெனவும் தெரிவித்து, நிகழ்வை நிறைவு செய்தார்.
[06:21, 1.9.2021] +49 163 3590849: யேர்மனி, 27.08.2021

யேர்மனி வாழ் தமிழீழ உறவுகளுக்கு வணக்கம்;
புலம்பெயர்ந்து வாழும் தமிழீழச் சந்ததிக்கான தமிழ்மொழிக்கல்வி மற்றும் ஈழத்தமிழர் வரலாற்றுக் கல்வி ஆகியவற்றை, 2009 வரையிலும் தமிழீழக் கல்விக் கழகமானது தாயகத்திலிருந்து வழிநடாத்தியது. 2009 இல் தமிழீழ அரசு தாயகத்தில் சிதைக்கப்பட்ட பின்னர், புலத்தில் உருவாக்கப்பட்டிருந்த தமிழீழம் நோக்கிய கட்டமைப்புகள் நிர்வாகச் சீர்கேடுகளால் சீரழிந்து போயின. இதுவரைநாளும், சிதைக்கப்படாமல் எஞ்சியிருந்த தமிழ்க்கல்விக்கான பாடநூல்களும், அதற்குரிய நிர்வாக அமைப்பும், கடந்த 05.06.2021 அன்று சிதைக்கப்பட்டு, “அனைத்துலகத்தமிழர் கல்விப் பேரவை“ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு, திரிபுபடுத்தப்பட்ட தமிழர் வரலாறு அடங்கிய பாடநூல்கள் வெளியிடப்பட்டு, மாணவர்கள் கையில் அவசர அவசரமாகத் திணிக்கப்பட்டுள்ளன

தமிழர் வரலாற்றுத் திரிபுகொண்ட பாடநூல்களை மீளப்பெறவேண்டும் என்றும், சீர்திருத்திய பின்னர் மாணவர்களிடம் ஒப்படைக்குமாறும் கடந்த 24.07.2021 தொடக்கம் நாம் குரலெழுப்பிவருகிறோம். இது தொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டில் அமையப் பெற்றிருக்கும் அனைத்துலகத் தமிழர் கல்விப் பேரவை நிர்வாகிகளுக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்தினோம். தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாடநூல்களை மீளப்பெறும் வண்ணம் கையெழுத்துத் திரட்டும் செயற்பாட்டையும், பின்னர் Zoom ஒன்றுகூடல் ஊடாக, திரிபுபடுத்தப் பட்ட வரலாற்றுப் பாடநூலாக்கற் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் அனைவரையும் திறந்த விவாதத்திற்கும் அழைத்தோம். இவையெதற்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

சுருங்கக்கூறின்; ஓர் மாத காலம் கடந்தும், வரலாற்றுத் திரிபுள்ள பாடநூல்கள் மீளப்பெறப்படவோ, அன்றி திருத்தப்படவோ இல்லை. பாடநூலாக்கற்குழு இழைத்த மன்னிக்க முடியாத வரலாற்றுத் தவறிலிருந்து எமது எதிர்காலச் சந்ததியை மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடும் உரிமையும் ஈழத்தமிழரான எமக்கு உண்டு. ஆதலால்; திரிபு படுத்தப்பட்ட பாடநூல்களைத் தவிர்த்து, ஏலவே நேர்த்தியாகக் கற்பிக்கப்பட்டு வந்த பாடநூல்களைத் தொடர்ந்தும் பயிற்றுவிக்க விரும்பும் அனைவருக்குமான பாடநூல்கள், தேர்வு, சான்றிதழ் ஆகியனவற்றை ஒழுங்கமைத்து வழங்க நாம் முன்வந்துள்ளோம். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது காலத்தில், தாயகத்திலிருந்து தமிழீழக் கல்விக் கழகத்தின் நேரடி மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட பாடநூல்களையே நாம் எமது எதிர்காலச் சந்ததிக்குக் கற்பித்து, எமது வரலாறு அழிந்துபோகாமல் காப்போம் என உறுதிகூறுகிறோம்.
மேலதிக விபரங்களுக்கும், செயற்பாடு தொடர்பான தெளிவூட்டலுக்கும் எம்முடன் தொடர்பு கொள்ளமுடியும் .

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

திரு.லோ. வலன்ரைன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்க்கல்வி மற்றும் விளையாட்டுச் செயலகம்
யேர்மனி
தொடர்பு : 0163 3590849