Mai 7, 2024

ஜெனிவா: 46ன் பரிந்துரைகள் அமலாக என்ன உத்தரவாதம்? பனங்காட்டான்

The United Nations Human Rights Council in Geneva, seen earlier this year during a presentation on the conflict in Syria. On Tuesday, Secretary of State Mike Pompeo and Ambassador Nikki Haley announced that the U.S. will be withdrawing from the council.


நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் சம்பந்தமாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றிய எழுத்து மூல அறிக்கையை பேரவையின் 49வது அமர்வில் மனித உரிமை ஆணையாளர்  சமர்ப்பிக்க வேண்டும், அத்துடன், பொறுப்புக்கூறல் தொடர்பாக பேரவையில் விவாதிப்பதற்கு  அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கையை 51வது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதலாவது வரைபின் இறுதி வாசகம். 
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் கடந்த 22ம் திகதி ஆரம்பமாகி இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஆரம்பமாவதற்கு முன்னரே சில விடயங்கள் பொதுவெளிக்கு வந்தன.

இம்முறை ஏதாவது ஆக்கபூர்வமாக இடம்பெறலாமென்ற நம்பிக்கை முழுமையாக இல்லாத நிலையிலும், சிலவேளை எதிர்பாராதவிதமாக ஏதாவது நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு அடிப்படைக் காரணமாக இரண்டு விடயங்களைக் கூறலாம்.

முதலாவது – மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்சிலற் அம்மையார் இலங்கை தொடர்பாக வெளியிட்டிருந்த அழுத்தம் திருத்தமான அறிக்கை. இந்த அறிக்கை வெளியான உடனேயே இலங்கை அரச தரப்பு கொதித்தெழுந்து காரசாரமான கருத்துகளை கண்களை மூடிக்கொண்டு வெளியிட்டது.

இரண்டாவது – தமிழ் தேசிய கட்சிகள் மூன்றினதும் தலைவர்களான இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய மூவரும் தமிழர் தரப்பு எதிர்பார்க்கும் விடயங்களை ஒரு கடிதமாக்கி, தாங்கள் ஒப்பமிட்டு ஒற்றுமையாக அனுப்பியது.

இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கோதபாய, பிரதமர் மகிந்த, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் வெளியிட்ட கருத்துகள் ஒற்றைப் புள்ளியில் மையம் கொண்டன. எந்தக் காரணம் கொண்டும் எந்தப் பிரேரணையையும் நிறைவேற்ற விடமாட்டோம், சர்வதேசத்துக்கு அடிபணிய மாட்டோம். மனித உரிமைப் பேரவை அதன் வரையறையை மீறி செயற்படுகிறது என்றவாறு இவர்களின் கருத்துகள் அமைந்தன.

அதேசமயம், மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையும், இலங்கையின் தட்டிக்கழிக்கும் போக்கும் பகிரங்கமானபோது, தமிழ் தேசிய தரப்பின் ஒற்றுமை ஏதோவொன்றை நடைபெறச் சாத்தியமாக்கும் என்ற எண்ணம் பலரிடமும் தோன்றியது.

இலங்கை விவகாரத்தைக் கையிலெடுத்த கூட்டு நாடுகளான பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, மொன்றிநீக்காரோ, வடமசிலோனியா ஆகிய ஐந்தும் வெளியிட்ட 46வது அமர்வுக்கான பிரேரணையின் முன்வரைபு வெளியானபோது ஏமாற்றமே ஏற்பட்டது. பேரவைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தமிழர் தேசிய தரப்பில் ஒப்பமிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சி.வி. விக்னேஸ்வரனும் தங்கள் ஏமாற்றத்தை உடனடியாகவே பகிரங்கப்படுத்தினர். ஆனால், இரா. சம்பந்தன் இது தொடர்பாக எதனையுமே தெரிவிக்காது வழக்கம்போன்று மௌனம் காக்கிறார்.

இதன் அடுத்த கட்டமாக, மெய்நிகர் இணைய அமர்வில் உரையாற்றிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தமது அறிக்கையை வாசித்தார். இது கோதபாயவின் ஆலோசகர்கள் தயாரித்துக் கொடுத்த அறிக்கை.

எடுத்த எடுப்பிலேயே ஒரு விடயம் இந்த அறிக்கையில் சுட்டப்பட்டது. பேரவையில் ஆணையாளரது அறிக்கை இலங்கைக்கு எதிரான பிரசார நடவடிக்கை என்பதே இலங்கை தரப்பு வாதம். (நவநீதம்பிள்ளை காலத்திலிருந்தே இதனைத்தான் இலங்கைத்தரப்பு கூறிவருகிறது). ஆணையாளரின் அறிக்கையை பேரவையின் 47 நாடுகளும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமெனவும் இலங்கையின் அறிக்கை வேண்டுகோள் விடுத்தது.

ஆணையாளரின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளையும் முடிவுகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிக்கிறது என்றும் இதில் சொல்லப்பட்டது.

இலங்கை அரசு இணைஅனுசரணை வழங்கிய 30:1 பொறுப்புக்கூறல் தீர்மானத்திலிருந்து வெளியேறுவதாக ஏற்கனவே அறிவித்தமையை மீண்டும் உறுதி செய்த இலங்கை அரசு, சில நாடுகளின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அறிவித்தது. இலங்கையின் அறிக்கையின் இறுதியில் கௌதம புத்தரின் மூன்று கோட்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த வாசகங்கள் பின்வருமாறு அமைந்தன.

‚எல்லா உயிரினங்களுக்கும் பாதுகாப்பு இருக்கட்டும். எல்லா உயிரினங்களும் துன்பத்திலிருந்து விடுபடட்டும். எல்லா உயிரினங்களும் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்“ என்பவையே மேற்கோள் காட்டப்பட்ட புத்தரின் சிந்தனைகள்.

இங்கு தெரிவிக்கப்பட்ட முதலிரண்டு விடயங்களையும் இலங்கை அரசாங்கங்கள் திரிகரணசுத்தியாக கடந்த 70 ஆண்டுகளாக கடைப்பிடித்திருக்குமானால் இலங்கையின் எல்லா உயிரினங்களும் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்குமென்பதை இதனைச் சொன்னவர்களுக்கே நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

அவ்வாறு அது நடந்திருந்தால், மனித உரிமைப் பேரவையின் முன்னால் இலங்கை நிறுத்தப்பட வேண்டிய தேவை வந்திராது. அடுத்தடுத்து பல தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய தேவை வந்திராது. இலங்கை மீது மனித உரிமை ஆணையாளர்கள் காட்டமான அறிக்கைகளை விட வேண்டிய தேவையும் ஏற்பட்டிராது. மொத்தத்தில், இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றிருக்க வேண்டிய நிலைமைகூட ஏற்பட்டிருக்காது.

புத்தரின் பௌத்த தர்மத்தை மீறி அதனை அவமதித்து அதன்மேல் நடந்து ஆட்சி பரிபாலனம் செய்யும் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியம், அவரது அற்புதமான கோட்பாட்டை இனவழிப்பிலிருந்தும் அதற்கான பொறுப்புக்கூறலிலிருந்தும் தப்புவதற்கு பயன்படுத்துவது கேவலமானது. அது புத்தரையே அவமதிப்பதாகும்.

இதனை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக உறுப்பு நாடுகள் தங்கள் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்துள்ளன. சில நாடுகளைத் தவிர மற்றையவை எந்தப் பக்கத்துக்குச் சாயும் என்பதை நிச்சயமாக கூற முடியாதுள்ளது.

பார்வையாளர் அந்தஸ்திலுள்ள அமெரிக்கா மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் அறிக்கைக்கு பூரண ஆதரவு அளித்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் பேரவை ஆணையாளரின் பரிந்துரைகளுக்கும் முடிவுகளுக்கும் ஆதரவு கூறியுள்ளது.

அதேசமயம், அமர்வின் இறுதியில் தேவைப்படின் மாற்றுவழி தேட வேண்டியிருக்கும் என்ற கருத்தும் வெளிப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பல்வேறு பிரமுகர்களுடனும் சந்திப்புகளை நடத்திய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பிரெப்லிப்ஸ் அவர்களும் மாற்றுவழி பற்றிய கருத்துகளை முன்வைத்துள்ளார்.

‚பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நீதியை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இலங்கைக்குள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதி கிடைக்குமென 12 ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளும் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாது காத்திருக்கின்றனர். இவைகளைப் பெற்றுக்கொடுக்க மாற்றுவழிகள் குறித்து ஜெனிவா பேரவையில் ஆராயப்படுகிறது“ என்று அமெரிக்கத் தூதுவர் பதிவிட்டுள்ளார்.

பேரவையின் அமர்வில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி, தமிழர் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

46வது அமர்வின் இறுதியில் இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்புக்கு வரும். 47 உறுப்பு நாடுகளில் 24ன் ஆதரவு கிடைத்தால் மட்டுமே தீர்மானம் நிறைவேறும். இல்லையேல் என்பதற்கு விடை தேட வேண்டுமானால், பேரவையின் கூட்டத்தொடர் முறைமையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் மார்ச், யூன், செப்டம்பர் ஆகிய மாதங்களில் மூன்று தனித்தனி அமர்வுகளாக பேரவை கூடும். 2009 மே மாதம் இனஅழிப்புடன் இலங்கை அரசு போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதேயாண்டு யூன் மாத அமர்வில் இலங்கை அரசு தனது பிரேரணையை இங்கு முன்வைத்தது.

2012, 2013, 2014ம் ஆண்டுகளில் சர்வதேச நாடுகள் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் பிரேரணைகளை முன்வைத்தன. 2015ல் இலங்கையின் இணைஅனுசரணையுடன் 30:1 இலக்க பொறுப்புக்கூறல் பிரேரணையை அமெரிக்கா முன்வைத்தது. 2017ம் ஆண்டில் இதனை வலியுறுத்தும் 34:1 இலக்க பிரேரணையும், 2019ம் ஆண்டில் இது தொடர்பான 40:1 இலக்க பிரேரணையும் முன்வைக்கப்பட்டன.

இவை எல்லாமே கானல் நீராகின. எதனையுமே இலங்கை நிறைவேற்றவில்லை. நல்லாட்சி அரசுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு காலநீடிப்பு பெற்றுக் கொடுத்து, சிங்கள தேசம் பிரேரணையை நீர்த்துப்போகச் செய்ய உதவியது.

இப்போது ஜெனிவாவில் ஐந்து நாடுகள் கூட்டாக வைத்துள்ள பிரேரணயின் இறுதி வாசகம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை தெரிந்து கொண்டால், அதன்பின் என்ன நடைபெறப்போகிறது என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

‚நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் சம்பந்தமாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றி எழுத்து மூல அறிக்கையை பேரவையின் 49வது அமர்வில் மனித உரிமை ஆணையாளர்  சமர்ப்பிக்க வேண்டும், அத்துடன், பொறுப்புக்கூறல் தொடர்பாக பேரவையில் விவாதிப்பதற்கு  அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கையை 51வது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும்“ என்பதே இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதலாவது வரைபின் இறுதி வாசகம்.

49வது அமர்வு என்பது 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெறும். 51வது அமர்வானது 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குரியது. ஆக, ஏதாவது இடம்பெறலாமென எதிர்பார்க்கும் காலம் பன்னிரண்டு மாதங்களிலிருந்து பதினெட்டு மாதங்களுக்கு பின்தள்ளப்படுகிறது. இக்காலம் மேலும் மேலும் பின்னோக்கி நகர்த்தப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

பன்னிரண்டு வருடங்கள் காத்திருந்தவர்களுக்கான காலம் 13 வருடங்கள் ஆக்கப்படுகிறது. மேலும் எத்தனை வருடங்கள்?

தண்டிக்கவோ கண்டிக்கவோ முடியாத பிரேரணைகள் தீர்மானங்களால் என்ன பயன் என்று ஜனவரி மாத கடைசி வாரத்தில் இப்பந்தியில் குறிப்பிட்டதையே மீண்டும் கூறவேண்டியுள்ளது.