Mai 7, 2024

முல்லையில் ஊடகங்கள் மீது நெருக்கடி!

முல்லைத்தீவு பகுதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு முனைப்படைந்துள்ள நிலையில் ஊடகங்களது வாய்களை மூடி விடயங்களை மூடி மறைக்க அரசு முற்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலார்களின் விவரங்கள், இலங்கை காவல்துறையால் சேகரிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், அண்மையில், குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு  காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்திருந்தார்.

அவ்வாறு முறைப்பாட்டில் குறிப்பிட்டதைப் போன்று வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில்  பார்வையிடுவதற்கு முல்லைத்தீவு காவல்துறையினர்; முறைப்பாட்டாளர் ரவிகரனை, நேற்று (29), குருந்தூர் மலைக்கு அழைத்துச்சென்றனர்.

இது தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை, மலைப்பகுதிக்குள் செல்வதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததுடன் அங்கு சென்ற ஊடகவியலாளர்களின் விவரங்களைச் சேகரித்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.