Mai 9, 2024

நல்லூர் தப்பித்தது:பொத்துவிலில் வாள் வெட்டு?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வி.மணிவண்ணன் தரப்பிடமுள்ள நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 உறுப்பினர்களும், எதிராக இரண்டு உறுப்பினர்களும் வாக்களிக்க, மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

அத்தோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பு முன்னாள் தவிசாளர் உட்பட இரண்டு உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்துகொள்ளவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசு கட்சியியை சேர்ந்த மூன்று ஊறுப்பினர்கள் நடுநிலை வகிக்க, தமிழீழ விடுதலை இயக்கத்தைச்சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அதேபோன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க, கஜேந்திரன் தரப்பினை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

அத்தோடு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சுயேச்சை குழு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம் சபையின் வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீது நேற்று மாலை வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில்  பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் தவிசாளர் பதவியை பொறுப்பேற்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.