Mai 8, 2024

யாழில் ஒரு தீவு கடலில் மூழ்கும் அபாயநிலை!

யாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு கடற் தடுப்பணைகளை அமைத்து தமது கிராமத்தை பாதுகாக்குமாறும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுந்தீவின் கரையோரக் கிராமங்கள் பல கடலரிப்புக்களுக்கு உள்ளாகி வருகின்றன என்றும் இதிலும் குறிப்பிட்ட சில பகுதிகள் வேகமான கடலரிப்புக்குகளுக்கு உள்ளாகி வருகின்றன எனவும் இவற்றை பாதுகாக்க கடல் தடுப்பணைகளை அமைக்குமாறு நெடுந்தீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுந்தீவின் பிடாரியம்மன் கோயிலடி முதல் காளவாய் முனைவரையான கரையோரப் பகுதிகளே அதிக கடலரிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் இதிலும் தாளைத்துறைக் கிராமம் அண்மையில் ஏற்பட்ட புரவிப் புயல் காரணமாக அதிக கடலரிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் எதிர்காலத்தில் தமது கிராமம் முழுமையாகவே கடலால் அரிப்புக்கு உள்ளாகும் அபாய நிலை காணப்படுவதாக கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இக் கிராமத்தினை பாதுகாக்கும் வகையில் கடந்த 1982ம் ஆண்டு கடல்நீர் தடுப்பணை ஒன்று அமைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களால் அழிவடைந்து தற்போது வீசிய புரவிப் புயல் காரணமாக முழுமையாகவே அழிவடைந்துள்ளது. இதேநேரம் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகளும் சேதமடைந்துள்ளன. இயற்கை அனர்த்தங்கள் என்பதை விட நாளாந்தம் கரையோரப் பகுதிகள் கடலரிப்புக்கு உள்ளாகிய கிராமமே அழியும் அபாயநிலை காணப்படுவதாகவும் தமது கிராமத்தை பாதுகாக்கும் வகையில் தடுப்பணைகளை அமைத்துத்தருமாறு கிராம மக்களும் கடற்றொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.