Mai 8, 2024

அரசாங்கம் தமிழர்களுக்கு மிகப் பெரிய அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது – மனோ கணேசன்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை இடித்ததன் மூலம் தற்போதைய அரசாங்கம் உயிரிழந்த இலங்கை தமிழ் மக்களுக்கு மாத்திரமல்லாது வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கும் மிகப் பெரிய அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

யுத்தம் மறக்கப்பட வேண்டும் என்பதில் வாதவிவாதங்கள் இல்லை. எனினும் இது இரண்டு தரப்பிற்கும் சமமானதாக இருக்க வேண்டும். வடக்கு மாகாணத்தில் தேவைக்கு அதிகமாக துப்பாக்கிகளுடன் கூடிய படையினரின் நினைவு தூபிகள் உள்ளன. தெற்கில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குள் மக்கள் விடுதலை முன்னணியின் போராளிகளான வீரர்களின் நினைவு தூபிகள் உள்ளன. இதனால், ஒரு தரப்புக்கு மாத்திரம் ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கேலிக்குரியது.

இந்த நினைவு தூபி அகற்றப்பட்டமை தொடர்பான பிரச்சினையில் அரசாங்கம் தப்பித்துக்கொண்டுள்ளது. ஒரு நாடு ஒரு சட்டம் என்ற விசர்த்தனமான நகைச்சுவையை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒரு நாடு ஒரு சட்டம் தேவை என்றால், இப்படியான செயல்களை நிறுத்துவது அவசியம் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.