Mai 9, 2024

இலங்கையில் இனப்படுகொலை நடந்தமைக்கு ஆதாரமில்லை…..

இலங்கையில் இனப்படுகொலை, போர்க்குற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண ஆளுநருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டத்தை கனடாவின் ஒன்றாறியோ நாடாளுமன்றம் நிறைவேற்றினால், இலங்கையில் நல்லிணக்க செயற்பாடு முற்றாக சீர்குலைந்து விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கனடாவின் ஒன்ராறியோ நாடாளுமன்றத்தில் அதன் இரண்டாவது வாசிப்பில் உள்ள 104 மசோதா ஒவ்வொரு ஆண்டும் மே 18 முதல் 25 வரை ‘தமிழ் இனப்படுகொலை கல்வி’ வாரத்தை நிறுவ முற்படுகிறது.

இது இயற்றப்பட்டு இயற்றப்பட்டால், ஒன்ராறியோ மாகாணத்தில் 4800 பாடசாலைகள் சட்டப்படி இலங்கையில் ஒரு தமிழ் இனப்படுகொலை நடந்ததை தங்கள் மாணவர்கள் அனைவருக்கும் கற்பிக்க வேண்டும் என்றும் இது இலங்கையின் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டை அழிக்கிறதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் இலங்கை குடிமகனான வல்வெட்டித்துறையை சேர்ந்த விஜய் தணிகாசலம், இந்த பிரேரணையை சமர்ப்பித்தார் என்றும், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் எமது நல்லிணக்க செயற்பாடு சீர்குலைந்து விடும்.

அதோடு இலங்கையில் இனப்படுகொலை நடந்தது, போர்க்குற்றம் நடந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையென ஐ.நா அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சட்டத்தை நிறைவேற்றக் கூடாதென நான் கனடிய பிரதமர், ஒன்றாரியே பிரதமரை கேட்டுக் கொள்கிறேன் என்றும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் எமது தற்போதைய, எதிர்கால நல்லிணக்க செயற்பாடுகளை முற்றாக சீர்குலைத்து, சமூகங்களை பிளவுபடுத்தி விடும் எனவும் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுத்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இல்லாத நல்லிணக்கத்தை வைத்து சுரேன் ராகவன் மாரடிக்கிறார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.