ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபை அமர்வில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான இராஜாங்க அமைச்சருமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் ஃபெப்ரவரி 22 முதல் மார்ச் 19ம் நாள் வரை நடைபெறவுள்ள 46-வது ஜெனீவா மனிதவுரிமைக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான கூட்டுப் பிரேரணை ஒன்று சர்வதேச நாடுகளால் கொண்டுவரப் படலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அமைச்சரின் இக்கூற்று வெளியாகியுள்ளது.

இலங்கைப் படையினர் எவ்வித யுத்தக் குற்றங்களிலோ, மனிதவுரிமை மீறல்களிலோ ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், யுத்த வலயத்துக்குள் சிக்குண்டிருந்த பொதுமக்களை காப்பாற்றுவதற்கான பாரிய மனிதாபிமான நடவடிக்கைகளிலேயே படையினர் ஈடுபட்டனர் என்பதற்கான முழுமையான ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், காணாமல்ப் போனவர்கள் குறித்த கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவினதும், இறுதிப் போருக்கு பின்னர் விசாரணைகளை முன்னெடுத்த பரணகம விசாரனை ஆணைக்குழுவினதும் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை அமெரிக்காவின் தருஸ்மன் விசாரணைக் குழுவினரும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் முன்னாள் ஆணையாளர் அல் ஹுசைனும் தடுத்து விட்டனர் என்று அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டினார்.

Russian ambassador to Sri Lanka Yury Materly

இந்நிலையில் எதிர்வரும் மனித உரிமை பேரவையின் அமர்வில் அரசாங்கம் இந்த அறிக்கைகளை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டதுடன், சீனா, ரஸ்யா பக்கிஸ்தான் மற்றும் கியூபா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க ஏற்கனவே உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.