April 26, 2024

காலைக்கதிர்” மின்னஞ்சல் இதழில் மார்ச் 6 ஆம் தேதி “சர்வதேச விசாரணை முடிந்ததா?“

காலைக்கதிர்” மின்னஞ்சல் இதழில் மார்ச் 6 ஆம் தேதி “சர்வதேச விசாரணை முடிந்ததா?“ என்ற தலைப்பில் ஆசிரியர் வித்தியாதரன் எழுதிய ஆசிரியத் தலையங்கம்!
சர்வதேச விசாரணை முடிந்ததா?
தமிழர்களின் ஆயுதம் தாங்கிய உரிமைப் போராட்டம் – விடுதலை வேள்வி – ஸ்ரீலங்காப் படைகளின் மிக மூர்க்கத்தன மான – மிக மோசமான – கொடூர நடவடிக்கைகள் மூலம் முடிவுறுத்தப்பட்டது. அந்தக் கொடூரங்களும் குரூரங்களும், யுத்தக் குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான அட்டூழியங்களும் தமிழர் தம் ஆன்மாவில் மறக்க முடியாத வேதனை வடுக்கள். தமிழர் தம் வாழ்வியலில் உணர்வுபூர்வமான விட யங்கள்.
வரப்போகும் பொதுத் தேர்தலில் அந்த உணர்வுபூர்வ விடயத்தைக் கையில் எடுத்து உணர்ச்சியைத் தட்டி எழுப்பி, வாக்குகளை அறவிடும் தந்திரோபாயம் கட்டவிழும்; கட்டவிழ்கின்றது.
அதன் ஒரு பகுதியாகத்தான் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற யுத்தக் கொடூரங்கள், மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை முடிந்து விட்டதா, இல்லையா என்ற சர்ச்சையாகும்.
அந்த விசாரணை இன்னும் முடியவில்லை என்று, இவ் விடயங்களின் பெயரால் அடிக்கடி ஜெனீவா “விசிட்’ அடிக்கும் நமது “பயர்பிராண்ட்’ அரசியல்வாதி சிவாஜிலிங்கம் தன்பாட் டுக்கு ஒரு கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
இந்த விவகாரங்களில் அதிகம் சம்பந்தப்பட்டவரான கூட் டமைப்பின் பேச்சாளரான சுமந்திரனை அரசியல் ரீதியாகத் தாக்குவதற்கான துரும்பாக உணர்வுபூர்வமான இந்த விடயமே பொருத்தமானது என சில தரப்புகள் கருதுகின்றன. சிவாஜிலிங்கம் மாத்திரமல்லர், கஜேந்திரகுமார் பொன்னம் பலம், நீதியரசர் விக்னேஸ்வரன் போன்றோரும் இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றனர்.
உண்மையில் மேற்படி அட்டூழியங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை நடைபெற்று முடிந்து விட்டதா அல்லது இனிமேல் தான் நடக்க வேண்டுமா? இல்லையே நடந்து முடியாத ஒன்றை நடத்த விவகாரமாக சுமந்திரன் சப்பைக் கட்டுக் கட்டுகின்றாரா? எது உண்மை.
இதில் “விசாரணை’ என்று தமிழில் நாம் குறிப்பிடும் விடயம் எது என்பதுதான் கேள்வி. குழப்பத்துக்கும் சர்ச்சைக்கும் அதுதான் காரணம்.
குற்றச் சம்பவங்கள் தொடர்பில் நடைபெறும் Investigation வேறு, Inquiry அல்லது Trial என்பது வேறு.
Investigation என்பது புலனாய்வு.
Inquiry அல்லது Trial என்பது விசாரணை.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்கள் தொடர் பில் சர்வதேச புலனாய்வு முடிவடைந்து விட்டது என்பதுதான் சுமந்திரன் கூறவருவது.
Inquiry அல்லது Trial என்ற விசாரணை இனிமேல் தான் நடக்க வேண்டும்.
முதலாவது விடயம் புலனாய்வு என்பது குற்றமிழைத்த தரப்புக்குத் தெரியத் தக்கதாக, பகிரங்கமாக நடக்க வேண்டும் என்பதில்லை. குற்றம் புரிந்த தரப்புக்குத் தெரியாமலேயே – அறிவிக்காமலேயே – புலன் விசாரணை நடக்கும். இலங்கை விவகாரத்தில் நடந்துள்ளது.
இரண்டு மட்டங்களில் நடந்து, புலனாய்வு அறிக்கைகள் வெளிவந்து விட்டன.
ஒன்று – தருமஸ்மன் குழுவின் அறிக்கை. அது 2011 இல் வெளிவந்து விட்டது.
அடுத்தது ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் விசேட அதிகாரிகளை சர்வதேசப் பிரமுகர்கள் மூவரை நியமித்து அவர்கள் மூலம் நடத்திய சுயாதீன புலனாய்வு அறிக்கை. அது 2015 செப்ரெம்பரில் வெளிவந்தது.
இரண்டுமே யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றன என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளன. அவற்றின் அடிப்படையில்தான் இலங்கை இராணுவத் தளபதிக்கு எதிரான நுழைவு இசைவுக்கான தடை உத்தரவை அமெரிக்கா பிறப்பித்தது.
புலனாய்வில் குற்றமிழைத்தவர்களாகக் கண்டுபிடிக்கப் பட்டவர்களை பொறுப்புக் கூற வைக்கும் நீதி விசாரணைதான் – வழக்கு விசாரணைதான் – இனிமேல் பாக்கி.
குற்றமிழைத்தவர்கள் என சந்தேகிக்கப்படும் பிரகிருதிகளை அந்த விசாரணையின் முன் நிறுத்தி சட்டத் தண்டனை வாங்கிக் கொடுக்கும் – கட்டிப் போடும் (Binding) – விடயத்தை முன்னெடுக்க வேண்டுமானால் அது வெறுமனே சர்வதேச விவகாரமாக அமைவதில் பயனில்லை. சம்பந்தப்பட்டடோரை சட்டரீதியாகக் கட்டி இழுத்து வந்து நிறுத்தக் கூடிய பொறுப்பில் இருப்போரையும் அந்த விவகாரத்தில் சம்பந்தப்படுத்த வேண் டும். அதனால்தான் சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுநர், புலனாய்வாளர்களுடன் இலங்கைத் தரப்பையும் சம்பந்தப் படுத்தி, அந்த நீதிப் பொறிமுறை விசாரணையை – பொறுப்புக் கூறும் நடைமுறையை – கலப்பு பொறிமுறை ஏற்பாடாக முன் னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.
சுயாதீனமாக – சுதந்திரமாக, நம்பகத்தன்மையுடையதாக இருப்பதற்காக புலனாய்வு நடவடிக்கை சர்வதேச ரீதியில் நடந்தது. இனி, தண்டனை வாங்கிக் கொடுக்கும் – பொறுப்புக் கூறலை நிலைநாட்டுவதன் மூலம் நீதியைப் பெற் றுக் கொடுக்கும் – நடவடிக்கை. குற்றமிழைத்த தரப்பை சம்பந்தப்படுத்துவதற்காக அதற்குக் கலப்புப் பொறிமுறை.
இந்த விடயம் தெளிவாகப் புரிந்தும்கூட, அரசியல் காரணங்களுக்காக புரியவில்லை என நடிப்பவர்களுக்கு இதைப் “புரியவைப்பது’’கஷ்டம்தான்.