April 23, 2024

மாற்று அணி கூட்டணியா? சி.வி விளக்கம்!

எம்மை ஒரு மாற்று அணி என்று அடையாளப்படுத்துவது குறித்து மக்களிற்கு மேலும் விளக்கமளித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

இதுபற்றி அண்மையில் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சிலர் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தமிழ் இனத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் முடிவுகளைத் தனித்து எடுக்க முடியாது என்றும் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளின் ஊடாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அதுவே எமது பாதை என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
எமது நடவடிக்கைகளை நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டினூடாக வெளிப்படையாக முன் கொண்டு செல்வதே உசிதமாகும் என்பது எமது கருத்து. தனிமனித உழைப்பை நம்பியிராது அறிவார்ந்தோரின் கூட்டான முயற்சியாக இது அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
இன்று நான் உங்கள் முன் உள்ளேன். நாளை நான் இல்லையென்றாலும் நிறுவனப்படுத்தப்படுவதனால் எம் கட்சியின் முயற்சிகள் தங்குதடையின்றி தொடர்ந்து பயணிப்பதுடன் முகவர்கள் உள் நுழைந்தாலும் பயணப் பாதை மாற்றியமைக்க முடியாது வலுவாக அமைந்திருக்கும். இதுவே இதன் சிறப்பம்சமாகும்.
நான் உங்களுக்கு தீர்வு பெற்றுத்தருவேன், வேலை தருவேன் என்று பொய்யான வாக்குறுதிகளைத் தரமாட்டேன். ஆனால் எனது நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் இவற்றையெல்லாம் பெற்றுத் தருவன என்ற நம்பிக்கை எனக்குண்டு. நாம் பலமான ஒரு இனமாக எம்மைக் கட்டியெழுப்ப இது வழிகோலும். ஏற்கனவே புத்திஜீவிகள் பலர் புலத்திலும் நிலத்திலும் எம்முடன் ஒன்றிணைந்து இம் மாற்றத்திற்காக உழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.  அத்துடன் 5 கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். கொள்கை மற்றும் அணுகுமுறைகளின் அடிப்படையில் மேலும் பலரையும் இணைத்து செயற்படுவோம். தமிழ் மக்களின் கூட்டு முயற்சிதான் எமக்கு விடிவைப் பெற்றுத் தரப் போகின்றது.
தமிழராகிய நாமே இலங்கைத் தீவின் மூத்த குடிகள். எமது மூதாதையர் சைவர்களாகவும் இடையில் பௌத்தர்களாகவும் பின்னர் ஏனைய மதங்களை அரவணைத்தவர்களாகவும் தொன்றுதொட்டு இத்தீவில் வாழ்ந்து வருகின்றோம். இதுவே வரலாறு. இவ் வரலாற்றை சிங்கள பௌத்த பேரினவாதம் செயற்கையாக மாற்றியமைப்பதனூடாக வரலாற்றை மாற்றலாம் என நினைக்கின்றது.  இதனை  அடையும்பொருட்டும்  பௌத்த சிங்கள வாக்குகளை கவருவதற்காகவும்; கிழக்கு மாகாணத்துக்கான விசேட ஜனாதிபதி செயலணியை அமைத்துள்ளனர். நேற்றைய தினம் வணக்கத்திற்குரிய தேரோ ஒருவர் செண்பகப் பெருமாளைச் சிங்களவர் என்று அடையாளம் காட்டியுள்ளார். ஒருவரின் மதத்தை மாற்றலாம். இனத்தை மாற்ற முடியாது. செண்பகப் பெருமாள் சபுமல் குமாரயா என்று சிங்களவர்களால் அழைக்கப்பட்டமையால் அவர் சிங்களவர் ஆகிவிட முடியாது.
இவற்றையெல்லாம் செய்துகொண்டு இனப் பிரச்சினைக்கான தீர்வினை தம்முடன் பேசுவதன் ஊடாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மாறாக சர்வதேசத்துடன் கதைப்பதனால் எதுவும் ஆகிவிடாது என்றும் கூறுகின்றனர். இவர்களின் இப்படியான செயற்பாடே எம்மை சர்வதேசத்தை நோக்கிச் செல்ல நிர்ப்பந்திக்கின்றது.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இன அழிப்பில் பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் தமது உயிர்களை அர்ப்பணித்து இன அழிப்புக்கான நீதியை நாம் பெறும்பொருட்டு சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றிற்கு இடம் ஏற்படுத்திச் சென்றுள்ளனர். எம்மக்களின் உரிமைகளை வெல்வதற்கான ஒரு வழிமுறையாக அது அமைகின்றது.  இதனை  வலுவாக பற்றிப்பிடித்து அதனை மேலும் பலப்படுத்தி தொடர்ந்து முன்னோக்கி நகர்வதனூடாக எமக்கான நீதியை சர்வதேச மட்டத்தில் என்றாவது ஒருநாள் நாம் பெற்றுக்கொள்ளமுடியும். இன்றும் எம்மக்கள் வருடக்கணக்கில் வீதிகளில் தமது தொலைந்த உறவுகளுக்காகவும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகவும் கண்ணீரும் கம்பலையுமாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் இந்த போராட்டங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் எமது செயற்பாடுகளை சர்வதேசமட்டத்தில் நாம் மேற்கொள்ள வேண்டும். அதை நாம் செய்வோம்.
நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக இருக்கமுடியாது. எமக்கு பக்கத்தில் 7.5 கோடி தொப்பிள்கொடி உறவுகளைக்கொண்ட தமிழ் நாடும், தமிழ் நாட்டை உள்ளடக்கிய இந்தியா என்ற பேரரசும் இருக்கின்றன. இவற்றை நாம் கடந்தகாலத்தில் சரியாகக் கையாளவில்லை. ஆனால் எமது நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டினூடாக அவர்களினதும் எமது புலம்பெயர் உறவுகளினதும் முழுமையான உதவியைப் பெற்று வீழ்ந்து கிடக்கும் எமது தேசத்தை நாம் மீளக் கட்டி எழுப்பவுள்ளோம்.  குறிப்பாக தமிழ் நாட்டு அரசை எமது பொருளாதார வளர்ச்சிக்கான நலத்திட்டங்களில் பங்குபற்றச் செய்து எமது பொருளாதார வளர்ச்சியினூடாக வேலையற்ற எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முனைவோம்.
எமது கல்வி வளர்ச்சியில் தமிழ் நாட்டு அரசின் புலமைப் பரிசில் திட்டங்களூடாக மேற்படிப்பிற்கான வாய்ப்பை அதிகரிப்பதுடன் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துறையில் எம் மாணவர்களின் ஆற்றலை அதிகரிப்பதற்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்க முயற்சிகள் எடுப்போம். ஏற்கனவே நான் அண்மையில் இந்தியா சென்றிருந்த போது இது பற்றி பலருடன் சம்பாஷத்திருந்தேன். அதுமட்டுமல்ல, எமது வரலாறு, தொல்லியல் போன்றவற்றை ஆராய்ந்து ஆவணப்படுத்துவதற்கு தமிழ்நாட்டு அரசினதும் அங்குள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களினதும் உதவிகளை பெற்றுக்கொள்ளவிருக்கின்றோம். இவை தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவோம். எமது மூலோபாய திட்டங்கள், உத்திகளின் அடிப்படையில் நீண்டகால செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி இவற்றை நாம் மேற்கொள்வோம்.
ஆகவே, இவற்றை நடைமுறைப்படுத்த மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கு வேண்டும். எம்மக்கள் பெருவாரியாகத் திரண்டு மூவேந்தரில் ஒருவரான பாண்டியனின் கொடியான மீன் கொடியை மீண்டும் பட்டொளி வீசிப் பறக்கவிட எமது கூட்டணியின் சின்னமான மீன் சின்னத்திற்கு வாக்களிக்க வேணடுவதாகவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.