April 24, 2024

தேர்தலில் வெற்றி பெற்ற பின் சுமந்திரன் ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம் உள்ளன!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் சுமந்திரன் ஆற்ற வேண்டிய கடமைகள் ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கு ஏராளம் உள்ளன!
ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கவுள்ள புதிய சவால்கள்
உரிமைப் போராட்டத்துக்கான எமது பயணத்தில் நாம் புதியதொரு அத்தியாயத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றோம். குறிப்பாக மூன்று விதமான சவால்கள் எம் முன்னிருக்கிறது.
1. தேசிய ரீதியிலும் குறிப்பாகத் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் உச்சபட்ச இராணுவ மயமாக்கல் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் ‘குறித்த சில பிரதேசங்களில்’ இயங்கும் சமூக விரோத சக்திகளை முறியடிக்கவென உருவாக்கப்பட்டிருக்கும் “ஜனாதிபதிச் செயலணி” இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இச் செயலணியில் முற்று முழுதாக முன்னாள் மற்றும் இந்நாள் இராணுவ மற்றும் பொலீஸ் அதிகாரிகள் மாத்திரமே நியமனம் பெற்றிருக்கிறார்கள். இச் செயலணிக்குச் சிவில் அதிகாரிகளையும், அரசியலமைப்பின் கீழ் சட்ட வரையறைகளுடன் இயங்கும் மற்றைய அரச நிர்வாகக் கட்டமைப்புகளையும் விசாரிக்கும் மற்றும் பணிப்புரை விதிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
2. 2010-2015 காலப் பகுதியில் எவ்வாறு தமிழ் பேசும் மக்களது நிலங்கள் சூறையாடப்பட்டு, எமது மக்களது இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டதோ, அதே நிலை மீண்டும் தோன்றவிருக்கிறது. அண்மையில் கிழக்கிலங்கையில் தொல்பொருள் பாதுகாப்புக்கென நிறுவப்பட்ட செயலணியில் தமிழர்களோ முஸ்லிம்களோ இணைத்துக் கொள்ளப்படவில்லை. முற்றிலும் சிங்கள பௌத்தர்களால் இச் செயலணி நிறைக்கப்பட்டிருப்பதோடு தொல்பொருள் காப்புக்கெனக் காணிகளைக் கையகப்படுத்தும் அதிகாரமும் இதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வகையிலான செயற்பாடுகள் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இன்னும் தீவிரமாகலாம்.
3. பொருளாதார அறிஞர்கள் பலரும் இலங்கை மிக மோசமனதொரு பொருளாதாரச் சரிவைச் சந்திக்கப் போவதை எதிர்வு கூறுகின்றார்கள். இது ஏற்கனவே போரினால் பாரிய இழப்புக்களைச் சந்தித்த வட-கிழக்கு மாகாணங்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
ஆகவே நாம் எமது இருப்பைக் குறிவைக்கும் அரசாங்கமொன்றை வீழ்ச்சியடைய உள்ள பொருளாதார மற்றும் ஜனநாயக வெளியில் எதிர்கொள்ளப் போகிறோம். இது இடர் நிறைந்த பாதை என்பதைப் புரிந்தவர்களாக எமது உரிமைப் போராட்டத்துக்கான பயணத்தில் எம்மைத் தயார்ப்படுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.
சுமந்திரனும் தமிழர்களும்
அடுத்த ஐந்தாண்டு காலத்தில் எமது சிந்தையும் செயலும் கடந்த பத்தாண்டு காலத்தில் நாம் அடைந்திருக்கும் முக்கியமான வெற்றிகளைக் காப்பாற்றிக் கொள்வதிலும், எம் பூர்வீகப் பிரதேசங்களில் எமது இருப்பை உறுதிப்படுத்துவதிலும் இடர் மிகுந்த சூழலில் எம்மை மென்மேலும் வளர்த்துக் கொள்வதிலும் முதலிடப்பட வேண்டும்.
1. சட்ட ரீதியாகவும் சாத்வீக வழிகளிலும் புதிய பேரினவாத முன்னெடுப்புக்களை எதிர்த்தல்.
2. நிரந்தரமான அரசியல் தீர்விற்கென சிங்கள மக்களது மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவென மேற்கொண்ட முயற்சிகளைத் மேலும் துரிதப்படுத்தலும் தீவிரப்படுத்தலும்.
3. ஆட்சிக்கு வரும் அரசாங்கத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் பிரதேசங்களைப் பொருளாதார ரீதியில் மீண்டும் கட்டியெழுப்புதல் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் உறவுகளைப் பேணுதலும், அழுத்தம் கொடுத்தலும்.
4. சர்வதேச சமூகத்தோடு நெருங்கிய உறவுகளைப் பேணி இலங்கை அரசு தமிழர் நலன்களைப் பேணுவதற்கும் அரசியற் தீர்வை முன்னெடுப்பதற்கும் அழுத்தம் கொடுத்தல்.
5. வட-கிழக்கிற்கென தனியான பொருளாதார நிரல் ஒன்றைத் துறைசார் வல்லுனர்களின் துணைகொண்டு தயாரித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல். தமிழ்ச் சமூகத்திலிருந்து வறுமையை அகற்றுதல். வெளி நாட்டிலிருந்து தமிழ்ப் பகுதிகளுக்கு முதலீடுகளைத் தருவித்தல்.
6. நேர்மையுடன் சமூக முன்னேற்றத்திற்கென உழைக்கும் இளம் தலைவர்களை உருவாக்குதல்.