Mai 3, 2024

யாழ். வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் ; முறையிட்டால் உடன் நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக எந்தவிதத் தயக்கமும் இன்றி முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என  யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர பசார் வீதி வர்த்தகர்களுடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள பசார் வீதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பசார் வீதியில் ஒரு வழிப் பாதை காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத் தரிப்பிடம் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக ஆராயப்பட்டது. வீதியில் இருமருங்கும் ஒவ்வொரு தினமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வாகனத் தரிப்பிட வசதியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.

வாகனங்கள் தரிக்க விடப்படும்போது வர்த்தக நிலையங்களுக்கு மக்கள் செல்லக்கூடியவாறு வர்த்தக நிலையங்கள் முன்பாக இடைவெளி விட்டு வாகனங்களைத் தரிக்க வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று வர்த்தகர்களால் கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட பொலிஸார், இது தொடர்பில்  நேரில் சென்று ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து யாசகம் பெற வருவோரும், சாம்பிராணி விற்க வருவோரும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்கின்றமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அவர்கள் மக்களை கட்டாயப்படுத்தும் விதமாக நடந்து கொள்வதால் மக்கள் வர்த்தக நிலையங்களுக்கு வராது அங்கிருந்து விலகிச் செல்லும் நிலமை காணப்படுகின்றது.

அவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வர்த்தகர்களால் கோரப்பட்டது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சந்திப்பில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர், வர்த்தகர்களிடம் கப்பம் கோருதல் அல்லது வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எந்தவிதத் தயக்கமும் இன்றி முறையிடலாம் என்று தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert